

மும்பை,
மராட்டிய சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றபோதிலும், முதல்-மந்திரி பதவியில் சிவசேனா பங்கு கேட்டதால் அந்த கூட்டணியால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது.
இதனால் காங்கிரஸ் மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து சிவசேனா ஆட்சி அமைக்க இருந்த நிலையில், அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
அதன்பிறகு திடீரென்று ஜனாதிபதி ஆட்சி ரத்து செய்யப்பட்டு, தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார் ஆதரவுடன் பாரதீய ஜனதா ஆட்சி அமைத்தது. ஆனால் சுப்ரீம்கோர்ட்டு விதித்த கெடுவின்படி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் 4 நாட்களில் அந்த அரசு கவிழ்ந்தது.
இதைத்தொடர்ந்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசு கடந்த வியாழக்கிழமை பதவி ஏற்றது. அப்போது 3 கட்சிகளை சேர்ந்த தலா 2 பேர் என 6 மந்திரிகளும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
டிசம்பர் 3-ந் தேதிக்குள் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டு இருந்தார்.
அதன்படி உத்தவ் தாக்கரே நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்காக நேற்று பிற்பகல் 2 மணிக்கு மராட்டிய சட்டசபை கூடியது. தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்ட தேசியவாத காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ. திலீப் வல்சே பாட்டீல் நேற்றைய கூட்டத்தை நடத்தினார்.
288 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க 145 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. தனிப்பெரும் கட்சியாக பாரதீய ஜனதாவுக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் இருந்தபோதிலும், சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் பலம் 154 ஆக இருந்தது. மேலும் சில சுயேச்சைகள் மற்றும் சிறிய கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு தெரிவித்ததால், உத்தவ் தாக்கரே அரசு எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சட்டசபையில், உத்தவ் தாக்கரே அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை காங்கிரஸ் உறுப்பினர் அசோக் சவான் முன்மொழிந்தார். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் அந்த தீர்மானத்தை வழிமொழிந்தனர். தனது அரசுக்கு உறுப்பினர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்தார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய பாரதீய ஜனதா சட்டசபை குழு தலைவரான தேவேந்திர பட்னாவிஸ், சட்டசபை கூட்டம் விதிமுறைகளின்படி கூட்டப்படவில்லை என்றும், மந்திரிகள் பதவி ஏற்பில் விதி மீறல் நடந்துள்ளது என்றும் கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வெளிநடப்பு செய்வதாக கூறி விட்டு சபையில் இருந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சி வெளிநடப்பு செய்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எம்.எல்.ஏ.க்களை எண்ணி வாக்கெடுப்பு நடத்துமாறு தற்காலிக சபாநாயகர் உத்தரவிட்டார்.
அதன்படி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே அரசுக்கு ஆதரவாக 169 எம்.எல்.ஏ.க்கள் வாக்கு அளித்தனர். இதனால் வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே அரசு வெற்றி பெற்றதாக தற்காலிக சபாநாயகர் அறிவித்தார். அப்போது ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் மேஜையை தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எம்.ஐ.எம். கட்சி உறுப்பினர்கள் 2 பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, நவநிர்மாண் சேனா கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவர் என 4 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டெடுப்பை புறக்கணித்ததாக தற்காலிக சபாநாயகர் தெரிவித்தார்.
இதையடுத்து தனது அரசை ஆதரித்த எம்.எல்.ஏ.க்களுக்கு நன்றி தெரிவித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசினார். அப்போது, சட்டசபையில் பணியாற்றிய அனுபவம் தனக்கு இல்லாததால், சபைக்கு வரும் முன்பு நெருக்கடியான நிலையில் இருந்ததாகவும், இங்கு வந்து இருப்பதை அதிர்ஷ்டமாக கருதுவதாகவும் கூறினார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) சபாநாயகர் தேர்தல் நடக்கிறது. ஆளும் கூட்டணி சார்பில், சகோலி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. நானா பட்டோலே சபாநாயகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா, முர்பாட் தொகுதி எம்.எல்.ஏ. கிஷான் கத்தோரேயை வேட்பாளராக அறிவித்து உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத பாரதீய ஜனதா, சபாநாயகர் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தி இருப்பதால், இரு அணிகள் இடையே பலப்பரீட்சை ஏற்பட்டு உள்ளது.