உடுமலை மனமகிழ் மன்றத்தின் ‘போர்ட்டிகோ’ இடிக்கும் பணி

சென்னை ஐகோர்ட்டு உத்தரவு படி உடுமலை மனமகிழ் மன்றத்தின் ‘போர்ட்டிகோ’-வை இடிக்கும் பணி தொடங்கியது.
உடுமலை மனமகிழ் மன்றத்தின் ‘போர்ட்டிகோ’ இடிக்கும் பணி
Published on

உடுமலை,

உடுமலை நகரில் வ.உ.சி. வீதி, கல்பனா ரோடு சந்திப்பில் மன மகிழ்மன்றம் உள்ளது. இந்த மன்றம் இருக்கும் இடம் நகராட்சி பெயரில் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த இடத்தில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய பிரமுகர்களை உறுப்பினர்களாக கொண்ட மனமகிழ்மன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த மனமகிழ்ச்சிமன்ற வளாகத்தில் 3 தங்கும் அறைகள், உணவு அறை, பிரதான ஹால், ஆகியவை கட்டப்பட்டுள்ளன.

பிரதான கட்டிடத்தின் முன்பகுதியில் போர்ட்டிகோவும் கட்டப்பட்டுள்ளது. இந்த மனமகிழ்மன்ற வளாகத்தில் விளையாட்டு மைதானம், கார்கள் நிறுத்தும்இடம் ஆகியவையும், வடபுறம் கச்சேரிவீதியில் கடைகளும் உள்ளன. உடுமலை மனமகிழ் மன்ற வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அறை கட்டிடங்கள் விதி முறைகளை மீறி கட்டியதாக நகராட்சி தரப்பில் கூறப்படுகிறது. நகராட்சி நிர்வாகமும், மனமகிழ் மன்றமும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன.

உடுமலை நகராட்சி நிர்வாகத்திற்கும், மனமகிழ் மன்றத்திற்குமான பிரச்சினைகுறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்குநடந்து வருகிறது. இதில் ஐகோர்ட்டின் உத்தரவு படி மனமகிழ் மன்ற வளாகத்தின் பிரதான நுழைவு வாயில், மனமகிழ்மன்ற கட்டிடங்கள் ஆகியவற்றுக்கு ஏற்கனவே நகராட்சி நிர்வாகம் தரப்பில் சீல் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 19-ந்தேதி கச்சேரி வீதியில் உள்ள 8 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.

இந்த மனமகிழ் மன்றம் குறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்குநடந்து வரும் நிலையில், மனமகிழ் மன்றத்தின் பிரதான கட்டிடத்தின் முன்புறம் அனுமதிபெறாமல் கட்டப்பட்டுள்ள போர்ட்டிகோ- வை அப்புறப்படுத்த வேண்டும் என்று மனமகிழ் மன்றத்திற்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அந்த உத்தரவை நிறைவேற்ற நேற்று மன மகிழ்மன்ற வளாகத்தில் நுழைவு வாயில் கதவு ஒன்றை நகராட்சிஅதிகாரிகள் திறந்து விட்டனர்.

அதை தொடர்ந்து மனமகிழ் மன்றத்தினர் ஏற்பாடு செய்துஇருந்த பணியாளர்கள் அந்த போர்ட்டிகோ- வை இடிக்கும் பணியை தொடங்கினார்கள். இந்த பணி இன்று (வெள்ளிக்கிழமை) முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் அந்தநுழைவு வாயில் கதவுக்கு மீண்டும் சீல் வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com