கலபுரகிக்கு செல்ல முடியவில்லை: எனக்கு இன்னும் உடல் சோர்வாக உள்ளது கோவிந்த் கார்ஜோள் பேட்டி

எனக்கு இன்னும் உடல் சோர்வு உள்ளதால், கலபுரகிக்கு செல்ல முடியவில்லை என்று கோவிந்த் கார்ஜோள் கூறியுள்ளார்.
கலபுரகிக்கு செல்ல முடியவில்லை: எனக்கு இன்னும் உடல் சோர்வாக உள்ளது கோவிந்த் கார்ஜோள் பேட்டி
Published on

பெங்களூரு,

வட கர்நாடகத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கலபுரகியில் சேடம், அப்சல்புரா உள்ளிட்ட தாலுகாக்களில் கனமழை கொட்டியதால் பல்வேறு பகுதிகளில் பாலங்கள் நீரில் மூழ்கின. கலபுரகியில் ஆற்றின் நடுவே உள்ள சாலையை கடக்க ஒரு டிராக்டர் முயற்சி செய்தது. அந்த டிராக்டரை ஆக்ரோஷத்துடன் வந்த வெள்ளம், இழுத்து சென்றது. அந்த டிராக்டரில் இருந்த 2 பேர் வெள்ளத்தில் எதிர்நீச்சல் அடித்து கரை வந்து சேர்ந்து உயிர்பிழைத்தனர்.

கலபுரகியில் இவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டபோதும், அந்த மாவட்ட பொறுப்பு மந்திரி கோவிந்த் கார்ஜோள், நேரில் சென்று மக்களின் கஷ்டங்களுக்கு உதவி செய்யவில்லை என்ற புகார் எழுந்தது. அவருக்கு எதிராக மக்கள் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நிவாரண உதவிகள்

நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது தான் மீண்டு வந்துள்ளேன். ஆனாலும் எனக்கு இன்னும் உடல் சோர்வாக உள்ளது. என்னால் தற்போது கலபுரகிக்கு செல்ல முடியவில்லை. தவிர்க்க முடியாத காரணத்தால் நான் நேற்று (நேற்று முன்தினம்) சிராவுக்கு சென்று, வேட்புமனு தாக்கலில் கலந்து கொண்டேன். கலபுரகி மாவட்ட கலெக்டருடன் நான் தொடர்ந்து தொடர்பில் உள்ளேன். அங்கு மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்யும்படி உத்தரவிட்டுள்ளேன்.

உயிர் சேதம், கால்நடைகள் பாதிப்பு, குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து விழுந்தது குறித்து உடனடியாக ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி கூறியுள்ளேன். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்கும்படியும் அறிவுறுத்தி உள்ளேன். வீடுகளை இழந்த மக்களுக்கு நிவாரண முகாம்களை திறந்து அங்கு அடைக்கலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆதங்கப்பட தேவை இல்லை

கலபுரகியில் வெள்ள பாதிப்பு குறித்து நான் தொடர்ந்து தகவல்களை பெற்று வருகிறேன். அவ்வப்போது தேவையான உத்தரவுகளை பிறப்பித்து மக்களுக்கு உதவ நடவடிக்கை எடுத்துள்ளேன். அதனால் பொதுமக்கள் ஆதங்கப்பட தேவை இல்லை. அனைத்து உதவிகளையும் செய்ய அரசு தயாராக உள்ளது.

இவ்வாறு கோவிந்த் கார்ஜோள் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com