பா.ஜனதா ஆட்சியில், அரசு அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள் நாராயணசாமி குற்றச்சாட்டு

மத்தியில் பா.ஜனதா கட்சி ஆட்சியில் அரசு அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.
பா.ஜனதா ஆட்சியில், அரசு அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள் நாராயணசாமி குற்றச்சாட்டு
Published on

புதுச்சேரி,

புதுவையில் மாணவர் காங்கிரஸ் தேர்தல் நேற்று முன்தினம் நடத்தப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை முடிந்து நேற்று முதல்-அமைச்சர் நாராயணசாமி முன்னிலையில் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.

இதன்படி மாணவர் காங்கிரஸ் தலைவராக கல்யாணசுந்தரம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைத்தலைவர்களாக விக்ரமாதித்தன், ரவீந்திரன், இந்திரஜித் ஆகியோரும், பொதுச்செயலாளர்களாக சரவணகுமார், பிரேம், பர்வத ராமநாதன், ராஜசேகர், ஸ்ரீஹரீஷ் ஆகியேரும் செயலாளர்களாக நவீன்குமார், புருஷோத், கமல்நாத், கவுதம், மணிபாரதி, நவநீதபிரியா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகளுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவரான அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தியின் உத்தரவின்பேரில் காங்கிரஸ் கட்சியில் அமைப்பு தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் மாணவர் காங்கிரசுக்கு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தல் வெளிப்படையான முறையில் நடந்தது.

காங்கிரஸ் கட்சி மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் இயக்கமாகும். இதனால்தான் இளம் வயதிலேயே பலர் கட்சியில் சேர்ந்து மக்கள் பணியினை செய்து வருகிறார்கள்.

புதுவையில் அடுத்ததாக இளைஞர் காங்கிரசுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதற்கான உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனையில் உள்ளது. தற்போது மாணவர் காங்கிரசுக்கு தேர்வாகியுள்ள நிர்வாகிகளில் பெண்கள் குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர். பெண்களுக்கும் போதிய வாய்ப்பு அளிக்கவேண்டும்.

மத்திய அரசுக்கு எதிராக ராகுல்காந்தி பலகட்ட போராட்டங்களை அறிவித்துள்ளார். அந்த போராட்டங்களில் இளைஞர், மாணவர் காங்கிரசார் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். பா.ஜனதா ஆட்சியில் சிறுபான்மை, தலித் மக்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. அரசு அதிகாரிகளும் மிரட்டப்படுகிறார்கள். இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com