

ஸ்கூபா டைவிங் முறையில் ஆழ்கடலுக்குள் சென்று, அங்கு புதைந்திருக்கும் ஆச்சரியங்களை ரசித்து பார்க்கும் பார்வையாளர் ரகத்தை சேர்ந்தவர் அல்ல இவர். கடலுக்குள் மூழ்கிச் சென்று கண்களுக்கு முழுமையாக புலப்படாத பகுதிகளில் அமைந்திருக்கும், கடல் நீரை தூய்மையாக்கும் சுத்திகரிப்பு நிலைய கருவிகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். கப்பல்களுக்கு அடியில் சென்றும் புனரமைப்பு பணிகளை மேற்கொள்கிறார். கடலுக்குள் ஹெலிகாப்டர் விழுந்தால் அதில் இருப்பவர்களை மீட்பது எப்படி? என்பது பற்றிய பயிற்சியும் பெற்றிருக்கிறார்.
இவருடைய ஆழ்கடல் அனுபவங்கள் சுவாரசியமான, சோகமான சம்பவ பின்னணிகளை கொண்டிருக்கின்றன. குளங்கள், ஏரிகள் போன்ற நீர்நிலைகளின் கட்டமைப்புகள் பற்றியும் அறிந்து வைத்திருக்கிறார். நீர்நிலைகளுக்குள் சென்று போராடி உடல்களை மீட்கும் சேவையையும் செய்து வருகிறார். கோவிந்தசாமி சென்னையை அடுத்த மாதவரத்தை சேர்ந்தவர். அனுபவத்தின் வாயிலாகவும், பயிற்சிகள் மூலமும் ஆழ்கடல் பகுதிகளை சர்வ சாதாரணமாக கையாளுகிறார்.
நீர் நிலைகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் கோவிந்தசாமி அவருடைய கடல் பயண அனுபவங்களை சொல்ல கேட்போம்!
நான் 10-ம் வகுப்பு படித்து முடித்ததும் குடும்ப சூழ்நிலையால் வேலைக்கு செல்ல தொடங்கினேன். அப்போது சென்னை துறைமுகத்தையொட்டிய கடல் பரப்புகளில் கற்களைக்கொட்டி கடல் அரிப்பை தடுக்கும் பணி நடந்தது. லாரியில் இருந்து கற்களை கடலுக்குள் கொட்டியதும் அவை நீருக்குள் சமமாக பரப்பப்பட்டிருக்கிறதா? என்பதை கடலுக்குள் மூழ்கி பார்க்கும் பணியில் ஈடுபட்டேன். கடலுக்குள் மூழ்கிச் சென்று மேடு, பள்ளமாக கிடக்கும் கற்களை சமப்படுத்தும் பணி எனக்கு பிடித்துப் போனது. மூழ்குவதும், மேலே நீந்தி வருவதும் ஜாலியாக இருந்தது. வெளி உலகத்தை விட அமைதியாக காட்சியளிக்கும் ஆழ்கடல் பரப்புகளுக்குள் சென்று வருவதை பொழுதுபோக்காகவே மாற்றிக்கொண்டேன். ஸ்கூபா டைவிங் போன்று கடலுக்கடியில் மூழ்கி செல்லும் பயிற்சியையும் முறைப்படி கற்க தொடங்கினேன் என்பவர், பின்பு கப்பல்களின் அடிப் பகுதிகளை பராமரிக்கும் பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்.
கப்பலுக்கு அடியில் 15 வகையான பாகங்கள் இருக்கின்றன. கடல் நீரால் கப்பலின் உள்பகுதியிலும், வெளிப்பரப்புகளிலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். கப்பலின் சுற்றுப்புற பகுதிகளில் சிப்பிகள் அமர்ந்து அதனையே புகலிடமாக மாற்றிவிடும். பவளபாறைகளில் மோதியும் கப்பல் சேதமடையும். மீன் வலைகளும் மாட்டிக்கொண்டிருக்கும். இப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டால், கப்பலால் வேகமாக செல்ல இயலாது. அதுமட்டுமின்றி கடல் நீரில் மூழ்கியிருக்கும் கப்பலின் பாகங்களை அடிக்கடி பராமரிக்கவும் வேண்டும். இல்லாவிட்டால் கப்பலின் ஆயுள் குறைந்துவிடும். கப்பலின் அடியில் படிந்திருக்கும் சிப்பிகள் மற்றும் சிக்கும் வலைகளை நீக்கும் பணியில் முதலில் ஈடுபட தொடங்கினேன். ஒருமுறை டைட்டானிக் கப்பலில் நடந்த சம்பவம்போன்று ஒரு கப்பலின் உள் பகுதியில் நீர் கசியத்தொடங்கியது. எந்த பகுதியில் இருந்து நீர் உள்ளே நுழைகிறது என்பதை கண்டுபிடிக்கும் முன்பு அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கிவிட்டது. நான் கப்பலின் அடிப்பகுதிக்கு சென்று அனைத்து வால்வுகளையும் சரிபார்த்து நீர் கசிவு எங்கிருந்து உருவாகிறது என்பதை கண்டுபிடித்து சொன்னேன். அது மிகவும் சிரமமான பணியாக இருந்தது என்கிறார்.
ஆழ்கடலுக்குள் கோவிந்தசாமிக்கு நண்பர்களும் கிடைத்திருக்கிறார்கள். களவான் என்ற மீன் இனம் அவருடன் நெருங்கி பழகிக்கொண்டிருக்கிறது. கடலுக்குள் செல்லும்போதெல்லாம் அது தன்னுடைய வரவை எதிர்பார்த்து காத்திருக்கும் என்று மனம் நெகிழ்கிறார்.
கப்பலின் அடிப்பகுதிகள், பாறை இடுக்குகள், கடலுக்குள் மோதி நொறுங்கிக் கிடக்கும் படகுகள் போன்றவைகளின் உள்பகுதிகளில்தான் பெரிய களவான் மீன் இனங்கள் வசிக்கும். ஆரம்பத்தில் ஒரே ஒரு மீன் மட்டும் என் கண்களில் தென்பட்டது. அது என்னை பார்த்து பயந்து விலகி ஓடியது. நானும் அதைப்பார்த்து பயந்தேன். பின்பு அதனை அடிக்கடி பார்க்க நேர்ந்ததால் அது என்னை பார்த்ததும் நெருங்கிவர தொடங்கியது. சில சமயங்களில் எனக்கு குறுக்கே வந்து நின்று என்னை அங்கும், இங்கும் நகர விடாது. அந்த அளவுக்கு அது என் மீது நேசம் காட்டத்தொடங்கிவிட்டது. நான் அதனை கைகளால் அரவணைத்து தள்ளிவிடுவேன். ஒருமுறை அதன் துணையுடன் ஒன்றாக சேர்ந்து வந்தது. இரு மீன்களை பார்த்ததும் பதற்றமடைந்துவிட்டேன். அதனை வெளிக்காட்டாமல் விலகிச் சென்றேன். ஓரிரு மாதங்கள் என் கண்களில் அந்த மீன்கள் தென்படவே இல்லை.