

திருவொற்றியூர்,
சென்னை துறைமுகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்படுவதற்காக மணலியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான சி.பி.சி.எல். நிறுவனத்திற்கு ராட்சத குழாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் திருவொற்றியூர் கடற்கரை மீனவ கிராமங்கள் வழியாக பூமிக்கடியில் ராட்சத குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்காக பூமிக்கு அடியில் சுமார் 20 அடி ஆழத்தில் ராட்சத துளையிடும் எந்திரம் மூலம் துளையிட்டு ஊடுருவி கொண்டு செல்கின்றனர். நேற்று காலை திருவொற்றியூர் பகுதியில் உள்ள கன்னிக்கோவில் குப்பத்தில் குழாய் பதிப்பதற்கான பணிகள் நடந்து கொண்டு இருந்தது. அப்போது 17க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் விழுந்ததால் அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை தொடர்ந்து தங்களது வீடுகளை வீட்டு குழந்தைகளுடன் வெளியேறிய பெண்கள் உள்பட எராளமானோர் குழாய் பதிக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை தடுத்து நிறுத்தினார்கள்.
இந்த பணிகளை முழுவதுமாக நிறுத்த வேண்டும் எனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவொற்றியூர் போலீஸ் உதவி கமிஷனர் ரகுராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், போலீசாருடன் சென்று விரிசல் ஏற்பட்ட வீடுகளை பார்வையிட்டனர்.
இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதி அளித்தனர் இதனையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இதேபோல் நேற்று மதியம் திருவொற்றியூர் குப்பத்தை சேர்ந்த பெண்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் அந்த பகுதியில் நடந்து வந்த குழாய் பதிக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு வந்த போலீசார் அதிகாரிகளை வரவழைத்து பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனாலும் வீடுகளில் விரிசல் ஏற்பட்டால் தங்களுக்கு மாற்று வீடு கட்டி தரவேண்டும் அல்லது விரிசலை உடனடியாக சரி செய்து கொடுக்க வேண்டும் என்று எழுத்து மூலம் உத்தரவாதம் கொடுங்கள் என்று கூறி கலைந்து செல்ல மறுத்தனர்.
சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு அதிகாரிகள் பெண்களிடம் வீடுகளில் விரிசல் ஏற்பட்டால் உடனடியாக சரி செய்து தரப்படும் என உறுதிபட தெரிவித்தனர். இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.