ஈரோடு மாவட்டத்தில் விவசாய இடுபொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை - கலெக்டர் சி.கதிரவன் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் விவசாய இடுபொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார். ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:–
ஈரோடு மாவட்டத்தில் விவசாய இடுபொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை - கலெக்டர் சி.கதிரவன் தகவல்
Published on

ஈரோடு,

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இந்த வேளையில் ஈரோடு மாவட்டத்தில் விவசாய பணிகள் மற்றும் விவசாய கூலி பணிகள் தங்கு தடையின்றி நடைபெற அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

விவசாயம் மற்றும் தோட்டக்கலை சார்ந்த எந்திரங்களின் பயன்பாடுகள் உள்ளடக்கிய விதைப்பு, நடவு, நீர் நிர்வாகம், அறுவடை போன்ற பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் விவசாயம் மற்றும் தோட்டக்கலை சார்ந்த விளைபொருட்களின் கொள்முதலுக்கு விதிக்கப்பட்டு உள்ள தடையும் நீக்கப்பட்டு உள்ளது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் விதைப்பு, நடவு உள்ளிட்ட விவசாய பணிகளுக்கு தேவையான இடுபொருட்கள் உரம், விதைகள் மற்றும் பூச்சி மருந்துகள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார், கூட்டுறவு மற்றும் அரசு விற்பனை நிலையங்களில் தங்குதடையின்றி கிடைக்கும். இந்த விற்பனை நிலையங்கள் தினசரி காலை 8 மணி முதல் பகல் 11 மணி வரை திறந்திருக்கும்.

இந்த இடங்களில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் சமுதாய இடைவெளியை கடைபிடிக்கவும், கிருமி நாசினி தெளிக்கவும், இங்கு வரும் விவசாயிகள் கைகளை கிருமிகள் இன்றி சுத்தம் செய்த பின்னரே இடுபொருட்களை வாங்கிட ஏதுவாக அனைத்து இடுபொருள் விற்பனையாளர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com