சட்டவிரோதமாக கொடுக்கப்பட்ட 81 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு தனி துணை கலெக்டர் நடவடிக்கை

வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் தனி துணை கலெக்டர் நடவடிக்கையின் பேரில் சட்டவிரோதமாக கொடுக்கப்பட்ட 81 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
சட்டவிரோதமாக கொடுக்கப்பட்ட 81 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு தனி துணை கலெக்டர் நடவடிக்கை
Published on

சீர்காழி,

சீர்காழி தாலுகா அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது வைத்தீஸ்வரன்கோவில் அருகே கரைமேடு கிராமத்தில் வசிக்கும் 50 குடும்பத்தினர் குடிநீர் இன்றி அவதிப்படுவதாக நாகை மாவட்ட சமூக நலத்துறை தனி துணை கலெக்டர் வேலுமணியிடம் புகார் மனு அளித்தனர். அதனை தொடர்ந்து நேற்று துணை கலெக்டர் வேலுமணி, கரைமேடு கிராமத்தில் திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டிக்கு செல்லும் நீர் ஏற்றும் குழாயில் சிலர் சட்டவிரோதமாக 13 இடங்களில் இணைப்பு கொடுத்து குடிநீரை பயன்படுத்தி வந்ததும், இதனால் நீர் ஏற்று தொட்டிக்கு தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டதும் தெரியவந்தது. மேலும் சட்டவிரோதமாக 68 குடிநீர் இணைப்பு கொடுத்து குடிநீரை பயன்படுத்தியதும் தெரியவந்தது. உடனடியாக முறை கேடாக பயன்படுத்தப்பட்டு வந்த 81 இணைப்புகளை அகற்ற உத்தரவிட்டார். அதன்படி 81 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மேலும் அப்பகுதியில் பழுதான 2 அடிபம்புகளையும் உடனடியாக சரி செய்யவும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஞானசெல்வி, ரெஜினாராணி ஆகியோரிடம் கேட்டு கொண்டார்.

இதனையடுத்து அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மாணவர்கள் குடிநீர் இன்றி அவதிப்படுவதாக மாணவர்களின் பெற்றோர்கள் துணை கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். அதனையும் சீரமைத்து, மாணவர்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்தார். மேலும் புதிதாக 200 அடியில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு மூலம் மேலகரைமேடு, நடுகரைமேடு, தெற்கு கரைமேடு ஆகிய பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது சீர்காழி தாசில்தார் பாலமுருகன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராம்குமார், வருவாய் ஆய்வர் ராஜேஷ், வைத்தீஸ்வரன்கோவில் கிராம நிர்வாக அலுவலர் நவநீதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சம்மாள், ஊராட்சி செயலாளர் ராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com