பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: புதுவைக்கு நாளை மறுநாள் ஜனாதிபதி வருகை அதிகாரிகளுடன், முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை மறுநாள் புதுவைக்கு வருகிறார். அவருடைய விழா ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: புதுவைக்கு நாளை மறுநாள் ஜனாதிபதி வருகை அதிகாரிகளுடன், முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை
Published on

புதுச்சேரி,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) புதுச்சேரி வருகிறார். அவர் காலாப்பட்டில் உள்ள புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார்.

இதற்காக ஐதராபாத்திலிருந்து தனி விமானத்தில் புதுச்சேரி விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து பல்கலைக்கழகத்துக்கு வரும் அவர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகிறார்.

பின்னர் கவர்னர் மாளிகைக்கு வரும் அவர் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்று பார்வையிடுகிறார். அதன்பின் ஆரோவில் சென்று மாத்ரு மந்திரை பார்வையிடுகிறார்.

இரவு கவர்னர் மாளிகையில் தங்கும் அவர் 24-ந்தேதி ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் செல்கிறார். அங்கு சனிபகவான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் அவர் அங்கிருந்து சென்னை செல்கிறார்.

ஜனாதிபதியின் வருகையையொட்டி முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சட்டமன்ற கமிட்டி அறையில் நடந்த இந்த கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அமைச்சர் ஷாஜகான், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா, அரசு செயலாளர்கள் சுர்பிர்சிங், தேவேஷ்சிங், போலீஸ் ஐ.ஜி. சுரேந்திரசிங் யாதவ், கலெக்டர் அருண் மற்றும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் ராகுல் அல்வால், அகன்ஷா யாதவ், நிகரிகாபட் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அப்போது ஜனாதிபதியின் வருகையையொட்டி செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். குறிப்பாக வரவேற்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தெரிவித்தனர்.

இதற்கிடையே ஜனாதிபதி காரில் செல்லும் சாலைகளில் உள்ள ஆக்கிரமப்பு அகற்றும் பணிகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன. அன்றைய தினம் சாலையோரம் கடைகள் ஏதும் அமைக்கக்கூடாது என்றும் போலீசார் வியாபாரிகளிடம் அறிவுறுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com