பணிநிரந்தரம் கோரி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

பணி நிரந்தரம் கோரி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
பணிநிரந்தரம் கோரி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்
Published on

திருச்சி,

திருச்சி ஜங்ஷன் ராக்கின்ஸ் சாலை பகுதியில் நேற்று தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் உண்ணாவிரதம் இருந்தனர். லால்குடி, ஒரத்தநாடு, பெரம்பலூர், அறந்தாங்கி, வேதாரண்யம், நாகப்பட்டினம், நன்னிலம், நவலூர் குட்டப்பட்டு, வேப்பூர், திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களில் உள்ள திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் வேலை செய்து வரும் கவுரவ, மணி நேர, பெற்றோர் ஆசிரியர் கழக விரிவுரையாளர்கள், அலுவலக பணியாளர்கள் ஆகியோரை பணிநிரந்தரம் செய்யவேண்டும், யு.ஜி.சி. விதிமுறைகளின்படி ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

உண்ணாவிரத போராட்டத்துக்கு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எம்.எஸ்.பாலமுருகன் தலைமை தாங்கினார். போராட்டத்தை மாநில தலைவர் பசுபதி தொடங்கி வைத்தார். சங்க பொருளாளர் இளங்கோவன், முன்னாள் தலைவர் பாண்டியன் உள்பட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

பேறுகால விடுப்பு

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பணிக்கால அனுபவ அடிப்படையில் அலுவலக பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும், உறுப்பு கல்லூரிகளில் நிறுத்தப்பட்ட எம்.பி.ஏ, எம்.சி.ஏ. பாடப்பிரிவுகளை மீண்டும் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், பணி அனுபவ சான்றிதழை மாத விடுபாடு இன்றி முழுமையாக வழங்க வேண்டும்.

தேர்வுத்தாள் மதிப்பீட்டாளர் பெயர் பட்டியலில் உறுப்பு கல்லூரி ஆசிரியர்களின் பெயர்களை இணைக்க வேண்டும், முனைவர் பட்ட ஆய்விற்கு உடனே அனுமதி வழங்கவேண்டும், பெண் ஊழியர்கள், பேராசிரியைகளுக்கு தற்செயல் விடுப்பு, பேறுகால மற்றும் மருத்துவ விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினார்கள். முடிவில் மனோகரன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com