பூர்வக்குடி மக்களுக்கு 9 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தாவிட்டால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம்

சீர்மரபினர் என்றழைக்கப்படும் பூர்வக்குடி மக்களுக்கு, மத்திய அரசால் நிறுத்தப்பட்ட 9 சதவீத இட ஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்தாவிட்டால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம் என விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
பூர்வக்குடி மக்களுக்கு 9 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தாவிட்டால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம்
Published on

நாமக்கல்,

சீர்மரபினர் நலச்சங்கம் மற்றும் வீரபோயர்கள் இளைஞர் பேரவை சார்பில் சீர்மரபினருக்கான (டி.என்.டி.) இடஒதுக்கீட்டு பயிற்சி வகுப்பு நேற்று நாமக்கல்லில் நடந்தது. வீரபோயர்கள் இளைஞர் பேரவையின் மாநில தலைவர் சிவசாமி தலைமை தாங்கினார். இதில் கூட்டுறவு சங்கங்களின் மாநில தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதையடுத்து சீர்மரபினர் நலச்சங்க தலைவர் அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பிரமலைக்கள்ளர், கூத்தப்பர், கள்ளர், பெரியசூரி, மறவர், ஆப்பநாடு கொண்டையன் கோட்டை மறவர், அம்பலக்காரர், போயர், ஒட்டர், தொட்டிய நாயக்கர், தெலுங்குப்பட்டி செட்டி, வெல்லயாங்குப்பம் படையாச்சி உள்பட 68 சாதியை சேர்ந்த 1 கோடி மக்கள் சீர்மரபினர் பட்டியலில் உள்ளனர்.

9 சதவீத தனி இடஒதுக்கீடு

இந்த சமூகத்தை சேர்ந்த பலர் இன்றளவும் விவசாயிகளாகவும், கூலித்தொழிலாளர்களாகவும் உள்ளனர். 2015-ம் ஆண்டு நீதிபதி ஈஸ்வரய்யா ஆணையம் சீர்மரபின மக்களுக்கு ஓ.பி.சி. உள்ஒதுக்கீடாக 9 சதவீத தனி இடஒதுக்கீட்டை வழங்க பரிந்துரை செய்தது. மேலும், அதை செயல்படுத்த 2017-ல் நீதிபதி ரோகிணி ஆணையம் நியமிக்கப்பட்டும், தற்போது வரையில் நிலுவையிலேயே உள்ளது.

மத்திய அரசு, சீர்மரபினர் மக்களுக்கு கல்வி உதவித்தொகை, விடுதி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால், தமிழகத்தில் இதுவரை எந்த திட்டங்களும் இந்த மக்களுக்கு கிடைக்கவில்லை.

தேர்தல் புறக்கணிப்பு

பூர்வக்குடி மக்கள் என்றழைக்கப்படும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்தோருக்கு, மத்தியில் 9 சதவீத இடஒதுக்கீடும், மாநிலத்தில் 10 சதவீத இடஒதுக்கீடுமாக வழங்க வேண்டும். 1979-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் வி.பி.சிங்கால் வகுக்கப்பட்ட, இந்த இடஒதுக்கீடு அதன்பின் ரத்து செய்யப்பட்டு விட்டது. எனவே, மீண்டும் அந்த 9 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்க வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலில், அந்த இட ஒதுக்கீட்டை வழங்கக் கோரி, தமிழக அரசை வலியுறுத்துவதுடன் தேவைப்பட்டால், தேர்தலை புறக்கணிக்க தயங்கமாட்டோம். மேலும் இடஒதுக்கீடு கேட்டு போராட்டங்களையும் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். இதில் பேரவை நிர்வாகிகள் துரைமணி, தங்கதுரை, செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com