கொரோனாவால் எளிமையாக நடந்த உப்பூர் வெயிலுகந்த விநாயகர் திருக்கல்யாணம்

கொரோனாவால் உப்பூர் வெயிலுகந்த விநாயகர்- சித்தி,புத்தி திருக்கல்யாணம் எளிமையாக நடந்தது.
கொரோனாவால் எளிமையாக நடந்த உப்பூர் வெயிலுகந்த விநாயகர் திருக்கல்யாணம்
Published on

ஆர்.எஸ்.மங்கலம்,

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா உப்பூரில் அமைந்து உள்ள வெயிலுகந்த விநாயகரை ராமபிரான் இலங்கைக்கு செல்லும் போது பூஜித்ததாக புராண வரலாறு உண்டு. இங்கு பண்டையகாலம் தொட்டு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொடியேற்றத்துடன் விழா தொடங்கி தினந்தோறும் விநாயகர் காலை மற்றும் இரவு நேரங்களில் ரிஷபம், காமதேனு, யானை, குதிரை உள்பட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து மக்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம்.

8-நாள் திருவிழாவாக சித்தி,புத்தி ஆகிய தெய்வங்களுடன் இங்குள்ள விநாயகருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும் விநாயகர்சதுர்த்தி அன்று விநாயகா ரிஷப வாகனத்தில் கடற்கரையில் தீர்த்தமாடும் நிகழ்ச்சியும் நடைபெறும். அப்போது வாணவேடிக்கை, மேளதாளங்கள் முழங்க சாமி வீதி உலா வந்து கோவிலை வந்தடைவார். இதைத்தொடர்ந்து பக்தர்கள் பால் காவடி, பறவை காவடி, மயில் காவடி, வேல் காவடி எடுத்து பூக்குழி இறங்கி விநாயகருக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

எளிமை

இந்தநிலையில் கொரோனாவால் இந்தநிகழ்ச்சிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. திருக்கல்யாணம் நிகழ்ச்சி மட்டும் கோவிலுக்குள் புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க எளிமையாக நடந்தது. சித்தி,புத்தி- விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். தமிழகத்திலேயே உப்பூர் வெயிலுகந்த விநாயகருக்கு மட்டுமே திருக்கல்யாணம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com