ஆழியாற்றில் தண்ணீர் திருட பயன்படுத்திய 25 குழாய்கள் அகற்றப்பட்டன

ஆழியாற்றில் தண்ணீர் திருடுவதற்கு பயன்படுத்திய 25 குழாய்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றினார்கள்.
ஆழியாற்றில் தண்ணீர் திருட பயன்படுத்திய 25 குழாய்கள் அகற்றப்பட்டன
Published on

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. ஆழியாற்றில் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் பொள்ளாச்சி நகராட்சி, குறிச்சி, குனியமுத்தூர் கூட்டுக்குடிநீர் திட்டம், 295 வழியோர கிராமங்களுக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் உள்பட பல்வேறு குடிநீர் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.இந்த நிலையில் தற்போது வறட்சி நிலவுவதால் அணையின் நீர்இருப்பு நாளுக்குநாள் குறைந்து வருகிறது. தற்போது அணையில் நீர்மட்டம் பாதியாக குறைந்து 59.30 அடியாக உள்ளது. தற்போது பழைய ஆயக்கட்டு, குடிநீர் மற்றும் கேரளாவுக்கு சேர்த்து ஆற்றில் வினாடிக்கு 450 கன தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் குடிநீருக்கு ஆற்றில் திறந்து விடும் தண்ணீரை ஒரு சிலர் குழாய் அமைத்து திருடி வருகின்றனர். இதன் காரணமாக குடிநீருக்கு திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைவதால் கூட்டுக்குடிநீர் திட்டங்களின் கீழ் குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக பல்வேறு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

இதற்கிடையில் தண்ணீர் திருட அமைக்கப்பட்டு இருந்த குழாய்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று அகற்றினார்கள். செயற்பொறியாளர் முத்துசாமி தலைமையில், உதவி செயற்பொறியாளர் கருணாகரன், உதவி பொறியாளர்கள் ராஜாகண்ணு, அசோக், முத்துக்குமார், மாணிக்கவேல் மற்றும் ஊழியர்கள் குழாய் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-ஆழியாறு தொடக்கம் முதல் கேரள எல்லை வரை 42 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. தற்போது வறட்சி நிலவுவதால் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்து விட்டது. இதன் காரணமாக அணையில் நீர்இருப்பு குறைவாக உள்ளது.

குடிநீருக்கு மட்டும் போதுமான அளவு தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. ஆற்றில் குடிநீருக்கு திறந்து விடும் தண்ணீரை குழாய் அமைத்து திருடுவதால் குடிநீர் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது.இதனால் ஆய்வு நடத்தி அம்பராம்பாளையம் ஆழியாற்றில் இருந்து ஆத்துப்பொள்ளாச்சி வரை 25 இடங்களில் தண்ணீர் திருட பயன்படுத்திய 25 குழாய்கள் அகற்றப்பட்டு உள்ளது. ஆற்றில் விதிமுறைகளை மீறி தண்ணீர் திருடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com