உத்தவ் தாக்கரே அயோத்தி பயணத்தை பா.ஜனதா வரவேற்கிறது : ராவ்சாகேப் தன்வே பேட்டி

உத்தவ் தாக்கரே அயோத்தி பயணத்தை பா.ஜனதா வரவேற்பதாக அக்கட்சியின் தலைவர் ராவ்சாகேப் தன்வே கூறினார்.
உத்தவ் தாக்கரே அயோத்தி பயணத்தை பா.ஜனதா வரவேற்கிறது : ராவ்சாகேப் தன்வே பேட்டி
Published on

மும்பை,

அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவதில் தாமதம் குறித்து சிவசேனா சமீப காலமாக கேள்வி எழுப்பி வருகிறது. மும்பையில் நடந்த தசரா பொதுக்கூட்டத்தின் போது பேசிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தான் வருகிற 25-ந் தேதி அயோத்தி செல்ல இருப்பதாகவும், அப்போது ராமர் கோவில் கட்டுவதில் ஏற்படும் தாமதம் குறித்து பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்புவேன் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையாக தானே, கல்யாண், பிவண்டியில் பா.ஜனதா மாநில தலைவர் ராவ்சாகேப் தன்வே நேற்று சுற்றுப்பணம் செய்தார்.

அப்போது அவரிடம், ராமர் கோவில் பிரச்சினையை பா.ஜனதாவிடம் இருந்து சிவசேனா பறித்து கொண்டதா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ராவ்சாகேப் தன்வே, ராமர் கோவில் பிரச்சினையை யாரும் யாரிடம் இருந்தும் பறிக்கவில்லை. அவர்கள் (சிவசேனா) அவர்களது கட்சி வேலையை செய்து கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் எங்களது கட்சி வேலையை செய்கிறோம். உத்தவ் தாக்கரேயின் அயோத்தி பயணத்த பா.ஜனதா வரவேற்கிறது என்றார்.

மேலும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ராவ்சாகேப் தன்வே பதிலளித்து கூறியதாவது:-

அனில் கோடே எம்.எல்.ஏ. ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்து இருக்கிறார். தேர்தல் சமயங்களில் இதுபோன்று நடப்பது வழக்கமானது. இதை யாரும் பெரிய விஷயமாக எடுத்து கொள்ள மாட்டார்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சியின் மத்திய விவகாரக்குழு இறுதி செய்யும். அதே நேரத்தில் வேட்பாளர்கள் தேர்வில் உள்ளூர் தலைவர்களின் கருத்து கேட்கப்படும்.

மும்பை- நாக்பூர் விரைவு சாலைக்கு சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே பெயரை சூட்ட வேண்டும் என்று அக்கட்சி கோரிக்கை விடுத்து இருப்பது குறித்து, இரு கட்சி தலைவர்களும் கலந்து ஆலோசித்த பிறகு அரசு முடிவு எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com