

திசையன்விளை,
நெல்லை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் வைகாசி விசாக திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதுபோல் இந்த ஆண்டிற்கான வைகாசி விசாக திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு உதய மார்த்தாண்ட பூஜை, மதியம் உச்சிகால பூஜை, இரவு சமய சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கடல் மண்ணை ஓலைப்பெட்டியில் சுமந்து வந்து கடற்கரையில் கொட்டி நேர்த்திக்கடன் செலுத்தி, சுவாமி தரிசனம் செய்தனர். இரவு சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து மகர மீனுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் ராஜகோபுர கமிட்டி தலைவர் முருகேசன், செயலாளர் வெள்ளையா, தொழில் அதிபர் வடமலை பாண்டியன், ராஜகோபுர கமிட்டி நிர்வாகிகள் ராஜாமணி, அழகானந்தம், தேர் திருப்பணி குழு தலைவர் சிவானந்தன், செயலாளர் தர்மலிங்கம் உடையார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவை முன்னிட்டு நெல்லை, நாகர்கோவில், வள்ளியூர், திசையன்விளை ஆகிய ஊர்களில் இருந்து உவரிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் செய்து இருந்தார்.