நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 1,70,902 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது; சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 70 ஆயிரத்து 902 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 1,70,902 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது; சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
Published on

நாமக்கல், மே.15-

தடுப்பூசி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகளும், கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனா தொற்றின் பாதிப்பை குறைப்பதற்கு தமிழகத்தில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இந்த தடுப்பூசிகள் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் போடப்படுகின்றன.

ஆரம்பத்தில் முன்கள பணியாளர்களுக்கு மட்டுமே போடப்பட்டு வந்த தடுப்பூசிகள், பின்னர் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள், தொடர்ந்து 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் விரிவுபடுத்தப்பட்டன. இந்த தடுப்பூசிகள் 2 தவணைகளாக செலுத்தப்படுகிறது.

1,70,902 டோஸ் தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் காரணமாக இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் 149 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர். 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் தற்போது அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள், சிறப்பு சிகிச்சை மையங்களில் சிகிச்சையில் உள்ளனர்.

இதனிடையே மாவட்டத்தில் இதுவரை (13-ந்தேதி) 1 லட்சத்து 70 ஆயிரத்து 902 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

6 நாட்களில்...

இதுகுறித்து மேலும் அவர்கள் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. கடந்த 7-ந் தேதி வரை 1 லட்சத்து 51 ஆயிரத்து 420 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருந்தது. இந்த எண்ணிக்கை கடந்த 6 நாட்களில் 19 ஆயிரத்து 482 ஆக உயர்ந்து, மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 70 ஆயிரத்து 902 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களில், 49 ஆயிரத்து 556 பேர் 2-வது டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com