வைகை அணைக்கு வந்த காதல் ஜோடிகளுக்கு இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பு

காதலர்கள் தினத்தையொட்டி வைகை அணைக்கு வந்த காதல் ஜோடிகளுக்கு இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பும், இந்திய மாணவர்கள் சங்கத்தினர் ஆதரவும் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வைகை அணைக்கு வந்த காதல் ஜோடிகளுக்கு இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பு
Published on

ஆண்டிப்பட்டி

உலகம் முழுவதும் காதலர்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. காதலர்கள் தினம் கொண்டாடுவதற்கு இந்து மக்கள் கட்சி, விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் காதலர்கள் தினத்தில் பிரச்சினைகள் ஏதும் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்டத்தில் வைகை அணை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் போலீசார் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அதன்படி வைகை அணையின் இரண்டு நுழைவாயில் பகுதி, பஸ் நிறுத்தம், வைகை அணை அருகே உள்ள மாந்தோப்பு பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் காதலர்கள் தினத்தன்று காதல் ஜோடிகளின் வருகை வைகை அணையில் அதிகமாக காணப்படும். ஆனால் நேற்று வைகை அணைக்கு குறைந்த அளவு எண்ணிக்கையில் காதல் ஜோடிகள் வந்திருந்தனர். அணைப்பகுதியில் காதல்ஜோடிகளை இந்திய மாணவர்கள் சங்கத்தின் சார்பில் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். அதே நேரத்தில் இந்து மக்கள் கட்சியினர், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் அங்கு வந்து காதல் ஜோடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து வந்து இந்து மக்கள் கட்சியினரையும், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினரையும் தடுத்து திருப்பி அனுப்பினர். ஒரே நேரத்தில் எதிர்ப்பும், ஆதரவும் இருந்ததால் வைகை அணை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் இருந்து இந்து எழுச்சி முன்னணியினர் ஊர்வலமாக வந்து அல்லிநகரத்தில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், நகர செயலாளர் வெங்கலா பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். அப்போது, காதலர் தின வாழ்த்து அட்டைகளை தீ வைத்து எரித்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com