திருவண்ணாமலை மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா - திரளான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா - திரளான பக்தர்கள் தரிசனம்
Published on

சேத்துப்பட்டு,

பெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார், கல்யாண லட்சுமி நரசிம்ம பெருமாள், கருடாழ்வார், அனுமன், சக்கரத்தாழ்வார், ஆண்டாள் தாயார் ஆகிய சாமிகளுக்கு திருமஞ்சனம் செய்து, ஸ்ரீரங்க சடகோப கைங்கர்ய சபா நிர்வாகி பாலாஜி பட்டர் கற்பூர ஆராதனை செய்தார். பின்னர் சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது.

முன்னதாக கோவிலில் மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோவிலில் கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில் சென்னை, காஞ்சீபுரம், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, பெரணமல்லூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஆரணி

ஆரணி, சார்பனார்பேட்டை பகுதியில் உள்ள கில்லா வரதராஜபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி அதிகாலையில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், மகா அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

அதேபோல உற்சவர் பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாளுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அதிகாலையில் ராஜகோபுரத்தில் உள்ள சொர்க்க வாசல் வழியாக சாமி வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். சாமி திருவீதி உலாவும் நடைபெற்றது.

ஆரணி, கொசப்பாளையம், பெரிய ஜெயின் தெருவில் உள்ள அலமேலுமங்கை சமேத சீனிவாசபெருமாள் கோவில், ஆரணி, தச்சூர் சாலையில் உள்ள கோதண்டராமர் கோவில், எஸ்.வி.நகரம், அக்ராபாளையம் பகுதிகளில் உள்ள சீனிவாச பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வந்தவாசி

வந்தவாசியில் உள்ள ரங்கநாயகி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வந்தவாசி அருகே உள்ள தென்னாங்கூர் பாண்டுரங்கன்-ரகுமாயி கோவில், ரங்கராஜபுரம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது.

செங்கம்

செங்கத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. விழாவை முன்னிட்டு ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால பார்த்தசாரதி பெருமாளுக்கு விசேஷ அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து சாமிக்கு தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, சொர்க்கவாசல் வழியாக வந்து, உற்சவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து சாமி கோவிலின் உட்பிரகாரங்களில் வலம் வந்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சாமி மாடவீதி உலா நடந்தது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வேணுகோபால பார்த்தசாரதி சுவாமி கோவில் முழுவதும் வண்ணமலர்களாலும், கரும்பு, தோரணங்கள் உள்ளிட்டவைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே உள்ள ஒண்ணுபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது. அப்போது ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கண்ணமங்கலம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை உற்சவர் கருட வாகனத்தில் கிருஷ்ணர் அலங்காரம் செய்யப்பட்டு, சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூரில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத வைகுண்ட சீனிவாச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் சாமிக்கு வடை மாலை, துளசி மாலை, மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து மேளதாளத்துடன் சாமி மாட வீதியுலா நடந்தது.

அதேபோல் லட்சுமி நாராயணபெருமாள் கோவிலிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com