வாஜ்பாய் மரணம்: அனைத்து கட்சியினர் மவுன ஊர்வலம்-அஞ்சலி

வாஜ்பாய் மரணமடைந்ததையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து கட்சியினர் சார்பில் மவுன ஊர்வலம், அஞ்சலி செலுத்தப்பட்டது.
வாஜ்பாய் மரணம்: அனைத்து கட்சியினர் மவுன ஊர்வலம்-அஞ்சலி
Published on

ஓசூர்,

பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் உயிரிழந்தார். அவரது மறைவையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட பா.ஜனதா சார்பில், ஓசூர் எம்.ஜி.ரோட்டில் உள்ள காந்தி சிலையருகே மாவட்ட தலைவர் முனிராஜ் தலைமையில், வாஜ்பாயின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், கோட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், மாநில இளைஞரணி செயலாளர் நாகராஜ், மாவட்ட செயலாளர் ராஜி, மாவட்ட துணைத்தலைவர்கள் சுதாநாகராஜன், போத்திராஜ், நகர இளைஞரணி தலைவர் விருபாக்ஷா மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

ராயக்கோட்டை 4 ரோட்டில் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர் கணேசன், வேப்பனப்பள்ளி முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் சின்னராஜ், அவைத்தலைவர் கிருஷ்ணன், நகர செயலாளர்கள் நாகராஜன், நாகராஜ், பெரியசாமி, பாபு சித்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர். கெலமங்கலத்தில் அனைத்து கட்சி சார்பில் வாஜ்பாய் மறைவையொட்டி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தேன்கனிக்கோட்டையில் பொதுமக்கள் சார்பில் வாஜ்பாய் மறைவையொட்டி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையொட்டி அவருடைய படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக முக்கிய வீதிகள் வழியாக வாஜ்பாய் உருவப்படத்துடன் மவுன ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

காவேரிப்பட்டணத்தில் பா.ஜனதா சார்பில் வாஜ்பாய் மறைவையொட்டி மவுன ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் சின்னசாமி, மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெயலட்சுமி, ஒன்றிய தலைவர் மகேந்திரகுமார், பொது செயலாளர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊத்தங்கரையில் அனைத்து கட்சியினர் மற்றும் அரசு, தனியார் பள்ளிகள் சார்பில் வாஜ்பாயிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் எக்கூர் செல்வம், சாமிநாதன், வித்யாமந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சந்திரசேகரன், தி.மு.க. நகர செயலாளர் பாபுசிவக்குமார், அமானுல்லா, ஜீவானந்தம் மற்றும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், த.மா.கா. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அமைப்புகள் சார்பில் வாஜ்பாய் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக மவுன ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டு வாஜ்பாயிக்கு அஞ்சலி செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com