

பாகல்கோட்டை:
ரூ.30 லட்சம் நிவாரணம்
பாகல்கோட்டை டவுன் நவநகர் பகுதியில் வசித்து வந்தவர் வீரேஷ் (வயது 24). இவருக்கு பெற்றோர் இல்லை. இதனால் சிறிய வயதில் இருந்து அக்கா மதுஸ்ரீயின் அரவணைப்பில் வீரேஷ் வளர்ந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மதுஸ்ரீக்கும், பெலகாவியை சேர்ந்த கவிமடா என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் அலமட்டி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் வீரேசின் வீட்டில் புகுந்தது. இதனால் அவரது வீட்டில் இருந்த பொருட்கள் அடித்து செல்லப்பட்டது.
மேலும் வீடும் சேதம் அடைந்தது. இதையடுத்து அரசு சார்பில் வீரேசுக்கு ரூ.70 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல் தவணையாக ரூ.30 லட்சம் வீரேசுக்கு வழங்கப்பட்டது. அந்த பணத்தை வீரேஷ் தனது அக்காள் மதுஸ்ரீக்கு கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் நிவாரணமாக கிடைத்த ரூ.30 லட்சத்தை தரும்படி மதுஸ்ரீயின் கணவர் வீரேசிடம் கேட்டு உள்ளார்.
குத்திக்கொலை
ஆனால் புதிதாக வீடு கட்ட வேண்டும், திருமணம் முடிக்க வேண்டும் என்று கூறி அந்த பணத்தை கொடுக்க வீரேஷ் மறுத்து விட்டார். இதுதொடர்பாக வீரேசுக்கும், கவிமடாவுக்கு பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வீரேசின் வீட்டிற்கு சென்ற கவிமடா உள்பட 5 பேர் சேர்ந்து வீரேசை கத்தியால் குத்திக்கொலை செய்தனர்.
இதுபற்றி அறிந்த நவநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் ரூ.30 லட்சம் நிவாரண பணத்தை தர மறுத்ததால் வீரேஷ் கொலையானது தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் குறித்து நவநகர் போலீசார் வழக்குப்பதிவு தலைமறைவாகிவிட்ட கவிமடா உள்பட 5 பேரையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.