“தென்னகத்தின் வல்லபாய் பட்டேல் எடப்பாடி பழனிசாமி” அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நகைச்சுவை பேச்சு

தென்னகத்தின் வல்லபாய் பட்டேலாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நகைச்சுவையாக பேசினார்.
“தென்னகத்தின் வல்லபாய் பட்டேல் எடப்பாடி பழனிசாமி” அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நகைச்சுவை பேச்சு
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகே ஒடுக்கத்தில் நடந்த அரசு மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-

அ.தி.மு.க.வை மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். தொடங்கிய போது முதன் முதலில் அவருக்கு வெற்றிக்கனியை பரிசாக கொடுத்து அ.தி.மு.க. புதிய வரலாறு படைக்க காரணமாக அமைந்தது திண்டுக்கல் மாவட்டம் தான். அவருக்கு பிறகு அ.தி.மு.க.வை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழிநடத்தினார். எம்.ஜி.ஆரை போலவே ஜெயலலிதாவும் மக்களுக்காக தொலை நோக்கு பார்வையுடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்.

தற்போது அ.தி.மு.க.வின் 4-வது அத்தியாயத்தை புன்னகை பேரொளியாகவும், சாமானிய மக்களின் சாதனை முதல்-அமைச்சராகவும், தென்னகத்தின் வல்லபாய் பட்டேலாகவும் எடப்பாடி பழனிசாமி இருந்து எழுதி வருகிறார்.(அப்போது கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது). ஒரு நாடு சுபிட்சமாக இருக்க வேண்டும் என்றால் அந்த நாட்டில் பசிப்பிணி இல்லாமல் இருக்க வேண்டும்.

தமிழகத்தின் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இருக்கும் வரை பசி என்ற வார்த்தை தமிழகத்தில் இருக்காது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இவர்களை போலவே மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சிட்டுக்குருவி போல் எல்லா இடங்களுக்கும் பறந்து சென்று கொண்டே இருப்பார். எறும்பைவிட வேகமாக ஓடுவார். இவருடைய ஆலோசனையின் பேரில் தான் தமிழகத்துக்கு 11 மருத்துவக்கல்லூரிகள் கிடைக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார்.

இந்த கல்லூரிகள் அமைக்கப்பட்டால் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை சாதாரண மக்களுக்கும் கிடைக்கும்.

இதற்கு முன்பு தமிழகத்தை ஆட்சி செய்த கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் திண்டுக்கல்லுக்கு மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கு அடிக்கல் நாட்டுவதாக கூறி ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ரெட்டியார்சத்திரம் பகுதிக்கு ஆயிரக்கணக்கானோரை அழைத்துச்சென்றனர். பின்னர் மருத்துவக்கல்லூரியை நாங்கள் கொடுத்துவிட்டோம் என்று கூறுகின்றனர்.

ஆனால் திண்டுக்கல்லுக்கு மருத்துவக்கல்லூரியை கொண்டுவந்தது அ.தி.மு.க. அரசு தான். விவசாயத்தை பாதுகாக்கவே குடிமராமத்து பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அதன் பின்னர் தமிழகத்தில் பலத்த மழை கொட்டியது. அணைகள், குளங்கள் என அனைத்தும் நிரம்பி பாசனத்துக்கு தண்ணீரும் கிடைக்க தொடங்கியது. இறை அருள் இருந்தால் மட்டுமே இது நடக்கும்.

ஒரு தாய் வயிற்றில் அண்ணன்-தம்பிகளாக பிறந்துவிட்டு அரசியல் அதிகாரத்துக்காக சண்டை போடும் அற்ப சகோதரர்களை நாடு பார்த்திருக்கிறது. ஆனால் வெவ்வேறு தாய் வயிற்றில் பிறந்திருந்தாலும் நம்முடைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் உடன்பிறந்த சகோதரர்கள் போல் இருந்து ஆட்சி செய்கிறார்கள். கொரோனா வைரஸ் பீதியால் மற்ற மாநிலங்களில் எல்லாம் சட்டசபை கூட்டத்தொடரை ஒத்தி வைக்கின்றனர்.

ஆனால் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்கள் பணி கெட்டுவிடக்கூடாது என்பதற்காக சட்டசபையை ஒத்திவைக்கவில்லை. தற்போது நடக்கும் விழாவுக்கு கூட இறைவன் மீது நம்பிக்கை வைத்து ஒரு முகமூடி கூட அணியாமல் வந்து கலந்துகொண்டுள்ளார். இதுவே மக்கள் மனதில் அவருக்கு நீங்கா இடத்தை கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com