மதுரை அருகே வேன் கவிழ்ந்து பெண் பலி; 7 பேர் படுகாயம்

மதுரை அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் பெண் பரிதாபமாக இறந்துபோனார். 7 பெண்கள் படுகாயமடைந்தனர்.
மதுரை அருகே வேன் கவிழ்ந்து பெண் பலி; 7 பேர் படுகாயம்
Published on

வாடிப்பட்டி,

மதுரை அருகே பரவையில் தனியார் நூற்பாலை உள்ளது. இங்கு சமயநல்லூர், தோடனேரி, அலங்காநல்லூர், சேந்தமங்கலம், தனிச்சியம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் வேலை செய்து வருகின்றனர். அவ்வாறு அங்கு வேலை பார்க்கும் பெண்களை அழைத்து செல்ல ஆலை நிர்வாகம் சார்பில் வேன் வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி நேற்று காலை 6.30 மணிக்கு அலங்காநல்லூர் பகுதியில் இருந்து 20 பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று பரவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த வேனை திருவாலவாயநல்லூரை சேர்ந்த பால்பாண்டி என்பவர் ஓட்டி சென்றார்.

திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சமயநல்லூரை அடுத்த டபேதார் சந்தை பஸ் நிறுத்தம் அருகில் அந்த வேன் வந்தபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சென்ற வேன் சாலையின் தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது.

அப்போது வேனில் இருந்த பெண்கள் அலறினர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் மற்றும் சாலையில் சென்றவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். ஆனால் வேனில் வந்த அலங்காநல்லூர் கல்லணையை சேர்ந்த ராஜா மனைவி ஈஸ்வரி(வயது 33) என்பவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் ரோகினி, சூரியா, கீதா, ரேவதி, போதுமணி, மல்லிகா, வாசுகி ஆகிய 7 பேர் படுகாயமடைந்தனர். மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com