வண்டல் மண்ணை முறைகேடாக எடுப்பதை தடுக்க நடவடிக்கை

கரடிஅள்ளி கிராம ஏரியில் வண்டல் மண் முறைகேடாக எடுப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி தெரிவித்தார்.
வண்டல் மண்ணை முறைகேடாக எடுப்பதை தடுக்க நடவடிக்கை
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் (பொ) கண்ணன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் கண்ணன், கூட்டுறவு துறை இணை பதிவாளர் பாண்டியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் நரசிம்மன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் மோகன் விஜயகுமார் (வேளாண்மை), வேளாண் வணிகம் துணை இயக்குனர் ராமமூர்த்தி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் உழவன்செயலி கையெடு பயன்பாடு குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. கூட்டத்தில் பயிர்சேதம் மற்றும் நெல்பயிர் சேதம் இழப்பீடு வழங்குதல், கோவில் நிலம் ஆக்கிரமிப்பு அகற்றுதல், கால்நடைகளுக்கு காப்பீடு, சீரான மின்சாரம், ஏரிகள் தூர் வாருதல், கூட்டுறவு கடன், குடிநீர் வசதி, தென்னை மர நிவாரணம் உள்ளிட்டவை குறித்து விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி கூறியதாவது.

காவேரிப்பட்டணம் கரடிஅள்ளி கிராம ஏரியில் வண்டல் மண் முறைகேடாக எடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அவற்றை வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கண்காணிக்க வேண்டும். தென்னை பாதிப்பிற்கு நிவாரணம் வழங்குவது குறித்து மாநில வருவாய் ஆணையத்திற்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. உத்தரவு வர பெற்றவுடன் நிவாரணம் வழங்கப்படும். அகசிப்பள்ளி கிராமத்தில் தெருவிளக்குகள் புதிதாக அமைக்க சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

பயிர் காப்பீடு துரிதமாக கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒசட்டி ஏரியிலிருந்து ரங்க சந்திரம் கிராமம் வழியாக காட்டுப்பகுதிக்குள் வீணாக தண்ணீர் செல்வதை தடுத்து தேன்கனிக்கோட்டை பெரிய ஏரிக்கு நீர் கொண்டு வருவது தொடர்பாக பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் தேக்கூர்-பாலதொட்டனப்பள்ளி ஊராட்சியில் குடிநீர் சீராக கிடைக்க வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com