வண்டல்-அவரிக்காடு பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - கலெக்டர் உத்தரவு

வண்டல்-அவரிக்காடு பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கலெக்டர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
வண்டல்-அவரிக்காடு பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - கலெக்டர் உத்தரவு
Published on

வாய்மேடு,

நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சி மற்றும் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழையையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்து கலெக்டர் சுரேஷ்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வடகிழக்கு பருவமழை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தலைஞாயிறு பேரூராட்சி அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான கருவிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ள அறையினையும் பார்வையிட்டார். பின்னர் பருவமழை காலங்களில் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவாமல் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களிடம் வீடு, வீடாக சென்று விழிப்புணர்வினை ஏற்படுத்துமாறு சுகாதாரத்துறை களப்பணியாளர்களுக்கு கலெக்டர் சுரேஷ்குமார் அறிவுரை வழங்கினார்.

தலைஞாயிறு பழையாற்றங்கரை, வண்டல் சாலை ஆகிய இடங்களில் வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை பார்வையிட்டார். அதன்பின்னர் குண்டூரான்வெளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் பள்ளி வளாகத்தினை சுகாதாரமாக பராமரிக்கவும், குடிநீர் தொட்டிகளை தேவையான கால இடைவெளியில் சுத்திகரிக்கவும் அறிவுறுத்தினார். பின்னர் வண்டல் கூட்டுறவு அங்காடியில் இருந்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் தரம் மற்றும் பொருட்களின் இருப்பு விவரம் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தார். அதன்பின்னர் வண்டல்-அவரிக்காடு இடையே பாலம் கட்டுமான பணிகளை பார்வையிட்ட கலெக்டர் சுரேஷ்குமார், பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் இளம்வழுதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், தாசில்தார் ஸ்ரீதர், தலைஞாயிறு பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித், வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராசு, வெற்றிச்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com