நீட் தேர்வினால் உயிரிழந்த அனிதா உருவச்சிலை திறப்பு பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்

செந்துறை அருகே நீட் தேர்வினால் உயிரிழந்த அனிதா உருவச்சிலை திறக்கப்பட்டது. இதில் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.
நீட் தேர்வினால் உயிரிழந்த அனிதா உருவச்சிலை திறப்பு பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்
Published on

செந்துறை,

அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த அனிதா என்ற மாணவி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி நீட் தேர்வில் தோல்வியடைந்த தால் தற்கொலை செய்து கொண்டார். நாடு முழுவதும் மாணவி அனிதாவின் மரணம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாணவி அனிதாவின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி, அனிதா நினைவு நூலகம், அனிதாவின் உருவச்சிலை திறப்பு விழா மற்றும் அனிதா நினைவு அறக்கட்டளை தொடக்க விழா ஆகிய நிகழ்ச்சிகள் அவரது சொந்த ஊரான குழுமூரில் நேற்று மாலை நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு நூலகம் மற்றும் அனிதா உருவச்சிலையை திறந்து வைத்து பேசினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சிவசங்கர், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில பொருளாளர் ரெங்கசாமி, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், இயக்குனர் கவுதமன், பல்வேறு கட்சி பிரமுகர்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அனிதா அறக்கட்டளை தலைவர் மணிரத்னம் நன்றி கூறினார். அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன் தாஸ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரியலூர் மாணவி அனிதா இறந்து ஓராண்டுகள் ஆகியும் நீட் தேர்வுக்கு விலக்கு பெறமுடியாதது தற்காலிக பின்னடைவு தான். நிச்சயம் நீட் தேர்வுக்கு எதிரான வெற்றியை போராடி பெறுவோம். வருகிற நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியிலும், நீட் தேர்வுக்கு விலக்கு என்பது எங்களின் பிரதான கோரிக்கையாக இருக்கும் என்றார்.

கி.வீரமணி கூறுகையில், நீட் தேர்வை தமிழகத்தை விட்டு விரட்டுவோம் என்று அனிதா இறந்த இந்த நாளில், தமிழக மக்கள் உறுதி ஏற்க வேண்டும். நீதிமன்றமும் நம்பிக்கை அளிக்கவில்லை, மத்திய, மாநில அரசுகளும் கைகொடுக்கவில்லை. இனி மக்கள் மன்றத்தை நாடுவோம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com