வீரபாண்டி ஆ.ராஜாவுக்கு மீண்டும் பொறுப்பு வழங்க வலியுறுத்தி சேலத்தில் தி.மு.க. தொண்டர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

வீரபாண்டி ஆ.ராஜாவுக்கு மீண்டும் பொறுப்பு வழங்க வலியுறுத்தி சேலத்தில் தி.மு.க. தொண்டர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
வீரபாண்டி ஆ.ராஜாவுக்கு மீண்டும் பொறுப்பு வழங்க வலியுறுத்தி சேலத்தில் தி.மு.க. தொண்டர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
Published on

சேலம்,

சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக வீரபாண்டி ஆ.ராஜா பொறுப்பு வகித்து வந்தார். அந்த பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டு தேர்தல் பணிக்குழு செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். எஸ்.ஆர்.சிவலிங்கம் சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதனால் வீரபாண்டி ஆ.ராஜாவின் ஆதரவாளர்கள் விரக்தியில் உள்ளனர்.

இந்த நிலையில் வீரபாண்டி ஆ.ராஜாவின் ஆதரவாளர்கள் ஏராளமானவர்கள் நேற்று மதியம் சேலம் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு வணிக வளாகம் முன்பு கூடினர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக மாவட்ட தி.மு.க. அலுவலகத்திற்கு சென்றனர். பிறகு அங்கு உள்ள வீரபாண்டி ஆறுமுகம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தீக்குளிக்க முயற்சி

அப்போது சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் சந்திரமோகன் திடீரென்று, வீரபாண்டி ஆ.ராஜா பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மீண்டும் வீரபாண்டி ராஜாவுக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்க வலியுறுத்தியும், தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி கோஷம் எழுப்பினார். மேலும் தனது ராஜினாமா கடிதத்தை தலைமைக்கு அனுப்பி வைப்பதாகவும் கூறினார். மேலும் தி.மு.க.வினர் வீரபாண்டி ராஜாவுக்கு மீண்டும் பொறுப்பாளராக பதவி வழங்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

இதனிடையே கூட்டத்தில் இருந்த முன்னாள் மாணவர் அணி நிர்வாகி கிச்சிப்பாளையத்தை சேர்ந்த திலீப், வீரபாண்டி ஆ.ராஜாவுக்கு மீண்டும் பொறுப்பாளர் பதவி வழங்க வேண்டும் என்று கூச்சலிட்டபடி திடீரென்று உடலில் டீசலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த தி.மு.க.வினர் மற்றும் போலீசார் அவரை பிடித்துக்கொண்டனர். பின்னர் அவரது உடலில் தண்ணீரை ஊற்றி அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

வீரபாண்டி ஆ.ராஜாவுக்கு மீண்டும் தி.மு.க. பொறுப்பாளராக பதவி வழங்க வலியுறுத்தி சேலத்தில் தி.மு.க. தொண்டர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் நேற்று சேலம் புதிய பஸ் நிலையம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஓமலூர்

இதே போன்று வீரபாண்டி ஆ.ராஜா மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை கண்டித்து, ஓமலூர் ஒன்றிய தி.மு.க செயலாளர் பெரமன் தலைமையில் தி.மு.க.வினர் பலர் ஓமலூர் பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் அம்மன் கோவில்பட்டி கிளை செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சண்முகம், காமலாபுரம் கிளை செயலாளர் ரமேஷ், செம்மண்கூடல் கிளை செயலளார் கிருஷ்ணமூர்த்தி, கணபதி, முன்னாள் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் தமிழ்வாணன், தொளசம்பட்டி மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com