இன்று முதல் காய்கறி சந்தைகள், மளிகை கடைகள் செயல்படும் - கலெக்டர் ராமன் அறிவிப்பு

சேலம் மாநகரில் முழு ஊரடங்கு உத்தரவு நேற்றுடன் நிறைவடைந்தது. இதையொட்டி இன்று முதல் காய்கறி சந்தைகள், மளிகை கடைகள் வழக்கம் போல் செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் ராமன் அறிவித்துள்ளார்.
இன்று முதல் காய்கறி சந்தைகள், மளிகை கடைகள் செயல்படும் - கலெக்டர் ராமன் அறிவிப்பு
Published on

சேலம்,

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவும், இந்த நோய் தொற்று சமூக பரவலாக மாறாமல் இருக்கவும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அதாவது கடந்த 25, 26-ந் தேதி ஆகிய 2 நாட்கள் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. 26-ந் தேதி முதல் நேற்று வரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்தது.

இதனால் முக்கிய சாலைகள் அனைத்தும் வாகன போக்குவரத்து எதுவுமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் அனைத்து கடைகளும், காய்கறி சந்தைகளும் மூடப்பட்டு இருந்தன. மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

சேலம் மாநகரை பொறுத்தவரை நேற்று 4-வது நாளாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதேசமயம் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியில் சுற்றித்திரிந்த பொதுமக்களை போலீசார் எச்சரிக்கை செய்தனர். ஹெல்மெட் மற்றும் முக கவசம் அணியாமல் மொபட் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வெளியே வந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.

முழு ஊரடங்கின் 4-வது நாளான நேற்று சேலத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் காய்கறி, மளிகை கடைகள் எதுவும் செயல்படவில்லை. இதனால் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடமாடும் வாகனங்கள் மூலம் அனைத்து பகுதிகளிலும் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன. அப்போது பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்றனர். முழு ஊரடங்கால் சேலம் மாநகர் முழுவதும் கடந்த 4 நாட்களாக வெறிச்சோடி காணப்பட்டன.

இந்த நிலையில் முழு ஊரடங்கு உத்தரவு நேற்று இரவுடன் நிறைவடைந்ததையொட்டி இன்று (புதன்கிழமை) முதல் காய்கறி சந்தைகள் மற்றும் மளிகை கடைகள் வழக்கம் போல் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்படலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் புறநகர் பகுதியில் கடந்த 25 மற்றும் 26-ந் தேதி ஆகிய 2 நாட்களும், சேலம் மாநகராட்சி பகுதியில் 25 முதல் 28- தேதி வரையிலும் முழு ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது. இந்த நாட்களில் பொதுமக்கள் வெளியே வருவதை முற்றிலும் தவிர்த்தனர். இதனால் கொரோனா நோய் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினருக்கும் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

முழு ஊரடங்கு உத்தரவு இன்று (அதாவது நேற்று) முடிவடைந்ததால் உழவர் சந்தைகள், காய்கறிகள் மற்றும் மளிகை கடைகள் நாளை (இன்று) முதல் அரசு அறிவித்தபடி காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்படலாம். அப்போது பொதுமக்கள் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மேலும் முக கவசம் அணியாமல் யாரும் வெளியே வரக்கூடாது. அவ்வாறு வருவது தெரியவந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். அவர்களுக்கு நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் வினியோகம் செய்யப்படும். மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் வகையில் 250 நடமாடும் உழவர் சந்தைகள் மூலம் காய்கறிகள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பாதித்தவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் அவர்களது குடும்பத்தினரையும், உறவினர்களையும் கண்டறிந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் காவல்துறை மற்றும் சிறைத்துறையில் பணிபுரியும் காவலர்களுக்கும் நோய்த்தொற்று உள்ளதா? என பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் யாரேனும் சேலம் மாவட்டத்திற்கு வந்தால் அவர்களுக்கு பரிசோதனை செய்யப்படும். சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறவில்லை.

கேரளாவில் வீட்டை விட்டு வெளியே செல்லும் நபர்கள் குடைகளை பிடித்தபடி செல்கிறார்கள். அவர்கள் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க இவ்வாறு செல்கிறார்கள். இதனால் அங்கு கொரோனா வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே போல சேலம் மாவட்ட பொதுமக்கள் தனி நபர் இடைவெளியை கடைபிடிக்க குடைகளை பிடித்தவாறு செல்லலாம்.

இவ்வாறு கலெக்டர் ராமன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com