‘ஸ்பீடு டிடெக்டர்’ நவீனகருவி மூலம் வாகனங்களின் வேகம் கண்காணிப்பு

வட்டார போக்குவரத்து அதிகாரிகளால் ‘ஸ்பீடு டிடெக்டர்‘ என்ற நவீன கருவி மூலம் வேகமாக வரும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டன. பஸ், கார்களுக்கு தலா ரூ.400 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
‘ஸ்பீடு டிடெக்டர்’ நவீனகருவி மூலம் வாகனங்களின் வேகம் கண்காணிப்பு
Published on

சேலம்,

தமிழகத்தில் விபத்துகளை தடுக்கும் வகையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்காணித்து, அபராதம் விதிக்க அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும் மாநில போக்குவரத்து ஆணையாளர் தயானந்தகட்டாரி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அதன்படி, வாகனங்களின் வேகத்தை கணக்கிடுவதற்காக சேலம் மண்டலத்திற்கு ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில், ஸ்பீடு டிடெக்டர் கருவி வாங்கப்பட்டது. இந்த நவீன கருவி மூலம் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால், வாகனங்கள் வரும்போதே அந்த வாகனத்தின் பதிவெண், எத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்கள் வருகிறது என்பதை கண்காணித்து பிரிண்ட் அவுட் வெளியே வந்து விடும். அருகில் அந்த வாகனம் வரும்போது நிறுத்தி ரூ.400 அபராதம் உடனடியாக விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டு வருகிறது.

அதிகாரிகள் கண்காணிப்பு

இந்த நிலையில் சேலம் மண்டல போக்குவரத்து துணை ஆணையாளர் பொன்.செந்தில்குமார் மேற்பார்வையில் நேற்று மாலை 4 மணி முதல் 6 மணிவரை சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில் ஸ்பீடு டிடெக்டர் என்ற நவீன கருவி மூலம், அவ்வழியாக வரும் வாகனங்களின் வேகத்தை கண்காணிக்கும் பணி நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஜெயகவுரி(ஆத்தூர்), கதிரவன்(சேலம் கிழக்கு), மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சரவணன், கோகிலா, பதுவைநாதன், சுரேந்திரன், சசிக்குமார், புஷ்பா ஆகியோர் வாகனங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள் 100 கிலோ மீட்டர் வேகத்திற்கு ஓட்ட அனுமதிக்கப்பட்டது. அதற்கு மேல் வேகமாக சென்றால் அபராதம் விதிக்கப்பட்டது. இதுதவிர பஸ், லாரி மற்றும் இதர வாகனங்களுக்கு 80 கிலோ மீட்டர் என வேகம் நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு மேல் வேகமாக சென்ற வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

6 வாகனங்களுக்கு அபராதம்

2 மணி நேரம் ஸ்பீடு டிடெக்டர் கருவி மூலம் நடத்தப்பட்ட கண்காணிப்பில் நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிவேகமாக சென்ற 5 கார்களுக்கும், ஒரு தனியார் பஸ்சுக்கும் தலா ரூ.400 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

இன்று(புதன்கிழமை) தர்மபுரி மாவட்டம் தொப்பூர் சுங்கச்சாவடியில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயகவுரி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com