சேலத்தில் 3 இடங்களில் நடந்த வாகன சோதனையில் ரூ.7 லட்சம், வெள்ளி பொருட்கள் பறிமுதல்

சேலத்தில் 3 இடங்களில் நடந்த வாகன சோதனையில் ரூ.7 லட்சத்து 10 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், ரூ.3½ லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்களும் சிக்கியது.
சேலத்தில் 3 இடங்களில் நடந்த வாகன சோதனையில் ரூ.7 லட்சம், வெள்ளி பொருட்கள் பறிமுதல்
Published on

சேலம்,

சேலம் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, சேலம் ராமகிருஷ்ணா சாலையில் தேர்தல் நிலைக்குழு அதிகாரி சாமிநாதன் தலைமையில் நேற்று காலை வாகன சோதனை நடந்தது. அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக காரில் இருந்த தொழில் அதிபர் ஹரிஸ்குப்தாவிடம் அதிகாரிகள் விசாரித்தபோது, வீட்டில் இருந்து பணத்தை எடுத்து கொண்டு வங்கிக்கு செல்வதாக கூறினார். ஆனால் அவரிடம் அதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. இதனால் ரூ.4 லட்சத்து 10 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

சேலம் கொண்டலாம்பட்டி புறவழிச்சாலை பகுதியில் உதவி பொறியாளர் சங்கர் கணேஷ் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கேரள மாநிலம் ஆலப்புழையை சேர்ந்த சானவாஸ் என்பவர் வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவரது காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.3 லட்சம் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர். சேலத்தில் நேற்று 2 இடங்களில் நடந்த வாகன சோதனையில் ரூ.7 லட்சத்து 10 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சேலம் அருகே கருப்பூர் சோதனைச்சாவடியில் நேற்று தேர்தல் பிரிவு நிலை கண்காணிப்புக்குழு அதிகாரி மணிகண்டன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சேலத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற அரசு பஸ்சில் ஏறி சோதனை செய்தனர். அதில் சூரமங்கலம் அருகே காசக்காரனூரை சேர்ந்த நடேசன் என்பவர் ஒரு பையில் ரூ.2 லட்சத்து 6 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை வைத்திருப்பது தெரியவந்தது. ஆனால் அவரிடம் அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை.

பெங்களூருவில் இருந்து வெள்ளிக்கட்டிகளை மொத்தமாக வாங்கி வந்து அதை வெள்ளி கொலுசு, வெள்ளி கால் செயின் ஆகியவற்றை தயாரித்து திரும்ப கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாமல் வெள்ளி பொருட்களை நடேசன் பஸ்சில் கொண்டு சென்றதால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல், சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சதீஷ் உத்தரவின்பேரில் அதிகாரிகள் குகை லைன்மேடு பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, குகை பகுதியை சேர்ந்த ஆரிப் என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1 லட்சத்து 43 ஆயிரம் மதிப்புள்ள 129 ஜோடி வெள்ளி கொலுசுகள் எடுத்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வெள்ளி பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com