திருவள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடமாடும் வாகனங்களில் காய்கறி, பழங்கள் கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து

அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று 24-ந் தேதியில் இருந்து வருகின்ற 31-ந் தேதி வரை ஒரு வார காலம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை பிறப்பித்திருந்தார்.
திருவள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடமாடும் வாகனங்களில் காய்கறி, பழங்கள் கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து
Published on

திருவள்ளூர்,

இந்த ஊரடங்கின் போது மளிகை, காய்கறி கடைகள் உள்ளிட்ட எந்த கடைகளும் திறக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும் பொதுமக்களின் சிரமத்தை போக்கும் விதமாக நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை பொருட்களை வீடு வீடாகச் சென்று வேளாண்மைத் துறை மூலம் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து நேற்று திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யும் திட்டம் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ.,வி. ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கி நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யும் திட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது., முதல்-அமைச்சர் பொதுமக்களின் இன்னலை போக்கும் விதமாக முழு ஊரடங்கு காலத்திலும் தங்குதடையின்றி காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் வீடு வீடாக சென்று விற்பனை செய்யும் திட்டத்தை அறிவித்தார்.

அவ்வாறு வாகனங்களில் காய்கறி, பழங்கள் விற்பனை செய்பவர்கள் பொதுமக்களுக்கு கூடுதல் விலைக்கு பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

அவருடன் நகராட்சி ஆணையர் சந்தானம், தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் திராவிட பக்தன், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், அரிகிருஷ்ணன் கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்குமார், பெட்ரிக் அருண்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பெரியபாளையம்

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சியில் உழவர் உற்பத்தியாளர் சங்கத்தின் மூலம் வாகனங்களில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யும் நிகழ்ச்சி துவக்கி வைக்கப்பட்டது.

10 வாகனங்களில் இப்பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கு சென்று விற்பனை செய்ய வசதியாக வாகனங்களை பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன், உழவர் உற்பத்தியாளர் சங்க நிர்வாக இயக்குனர் பாபு ஆகியோர் துவக்கி வைத்தனர்.

கன்னிகைபேர் ஊராட்சியில் காய்கறிகள், பழங்கள் வீடு தேடி சென்று பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் வகையில் 5 வாகனங்களை இயக்கி வைக்கும் நிகழ்ச்சியை ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி உதயகுமார் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே துவக்கி வைத்தார்.

வெங்கல் ஊராட்சியில் வீடு தேடி சென்று காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யும் 4 வாகனங்களை ஊராட்சி மன்ற தலைவர் சுகந்திராணி லிங்கன் இயக்கி வைத்தார்.

ஊத்துக்கோட்டை

ஊத்துக்கோட்டையில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு காய்கறி, பழவகைகளை வீடு தேடிச்சென்று வாகனங்களில் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று காலை முதல் அமலுக்கு வந்த இத்திட்டத்தின் படி, வாகனங்கள் வைத்திருப்பவர்கள் காய்கறி, பழ வகைகளுடன் பேரூராட்சி அல்லது ஊராட்சி அலுவலகங்களுக்கு சென்று அங்கு வழங்கும் அனுமதி சான்று பெற்று தெருத்தெருவாக சென்று விற்பனை செய்யலாம். காலை 6 மணி முதல் 12 மணி வரை விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது.

2 மணிக்கு மேல் காய்கறிகள் விற்பனை செய்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டத்தை ஊத்துக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் மாலா, போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

கும்மிடிப்பூண்டி,

இந்த நிலையில், தமிழக அரசின் உத்தரவின்படி அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரிடையாக சென்று கிடைத்திட கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் முதல் கட்டமாக 15 வார்டுகளில் 20 நடமாடும் காய்கறி வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தை நேற்று கும்மிடிப்பூண்டி பஸ் நிலையத்தில் எம்.எல்.ஏ. டி.ஜெ.கோவிந்தராஜன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். செயல் அலுவலர் யமுனா, தாசில்தார் மகேஷ், துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், வட்டார மருத்துவர் டாக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com