வேளாங்கண்ணியில், புத்தர் சிலையை எடுத்து சென்ற அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை

வேளாங்கண்ணியில் புத்தர் சிலையை எடுத்து சென்ற அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேளாங்கண்ணியில், புத்தர் சிலையை எடுத்து சென்ற அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை
Published on

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கீழத்தெரு அருகே பழமையான புத்தர் சிலை இருந்தது. இந்த சிலையின் தலை பகுதியை காணவில்லை. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் புத்தரை வழிபட்டு வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் புத்தர் சிலையை அப்புறப்படுத்த முயற்சி செய்தனர்.

இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் சிலையை அப்புறப்படுத்த முயன்றவர்கள் சிலையை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

இதுகுறித்து கீழ்வேளூர் தாசில்தார் கபிலனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நேற்று வருவாய்த்துறை அதிகாரிகள் வேளாங்கண்ணிக்கு வந்து புத்தர் சிலையை ஆட்டோவில் எடுத்து சென்றனர். சிலையை பாதுகாப்பான இடத்தில் வைப்பதற்காக அதிகாரிகள் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

இதை அறிந்த பா.ஜனதா தெற்கு மாவட்ட தலைவர் நேதாஜி மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலை ஆர்ச் அருகே ஆட்டோவை வழிமறித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலையை எடுத்து செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பப் பட்டது. போராட்டத்தின்போது சிலர் ஆட்டோ சக்கரத்தின் காற்றை பிடுங்கி விட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் மற்றும் போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது தொல்லியல் துறையினர் மூலமாக ஆய்வு நடத்தி புத்தர் சிலை எத்தனை ஆண்டுகள் பழமையானது? என்பதை கண்டறிய வேண்டும். சிலையை மீண்டும் அதே இடத்தில் வைத்து அந்த பகுதியை வழிபாட்டு தலமாக மாற்றவேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

இதற்கு பதில் அளித்த போலீசார் சிலை கிடந்த இடத்துக்குரிய ஆவணங்களை பார்த்தபிறகு சிலை மீண்டும் அதே இடத்தில் வைக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பேரில் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து சிலை கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. பொதுமக்களின் போராட்டத்தால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com