திருச்செந்தூர் கோவிலுக்கு பறக்கும் வேல் காவடி ஊர்வலம்

குமரி மாவட்டத்தில் மணவாளக்குறிச்சி, குளச்சல், திங்கள்சந்தை போன்ற பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் வேல் காவடி ஊர்வலம் புறப்பட்டது.
திருச்செந்தூர் கோவிலுக்கு பறக்கும் வேல் காவடி ஊர்வலம்
Published on

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி, குளச்சல், திங்கள்சந்தை போன்ற பகுதிகளில் இருந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு ஆண்டுதோறும் பறக்கும் வேல் காவடி புறப்பட்டு செல்வது வழக்கம். திருச்செந்தூர் கோவில் மாசி திருவிழாவையொட்டி பறக்கும் வேல் காவடி ஊர்வலம் நடைபெறும்.

விரதம் இருக்கும் பக்தர்கள் உடலில் அலகு குத்திக் கொண்டு, வாகனத்தில் கட்டப்பட்டு இருக்கும் ராட்சத கம்புகளில் தொங்கியபடி திருச்செந்தூருக்கு செல்வது, பறக்கும் வேல் காவடி ஆகும். திருச்செந்தூரில் மாசி திருவிழா தொடங்கியதையொட்டி நேற்று குமரி மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் வேல் காவடி ஊர்வலம் தொடங்கியது.

இதையொட்டி மணவாளக்குறிச்சியில் யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் வேல் காவடி விழா 2 நாட்கள் நடந்தது. முதல் நாள் விழாவில் கணபதிஹோமம், தீபாராதனை, வேல் தரித்தல், காவடி அலங்காரம் போன்றவை நடைபெற்றன.

இரண்டாவது நாளான நேற்று காலையில் தீபாராதனையை தொடர்ந்து, யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து பறக்கும் வேல் காவடி ஊர்வலம் தொடங்கியது. மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு இந்த ஊர்வலம் சென்றது. அங்கு தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன. மதியம் அன்னதானம் நடந்தது.

பின்னர் மாலையில் மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூரை நோக்கி பறக்கும் வேல் காவடி ஊர்வலம் வாகனத்தில் புறப்பட்டது. இந்த ஊர்வலம் அம்மாண்டிவிளை, வெள்ளமோடி, ராஜாக்கமங்கலம் வழியாக சென்றது.

வடக்கன்பாகம் தர்ம சாஸ்தா கோவிலில் பறக்கும் வேல்காவடி நிகழ்ச்சிகள் இரண்டு நாட்கள் நடந்தன. முதல்நாள் விழாவில் கணபதிஹோமம், திருவிளக்கு பூஜை, வேல் தரித்தல், அன்னதானம், காவடி பூஜை, காவடி அலங்காரம் போன்றவை நடந்தன.

நேற்று காலையில் தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து காவடிகள் புறப்பட்டு மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று தீபாராதனை நடந்தது.

பின்னர், மாலையில் பறக்கும் வேல்காவடிகள் தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு புறப்பட்டது. இதே போல், சேரமங்கலம் ஆழ்வார்சாமி கோவிலில் இருந்தும் பறக் கும் வேல்காவடிகள் புறப்பட்டன.

குளச்சல் பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கோவில்களில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் வேல் காவடி ஊர்வலம் புறப்பட்டு சென்றது. குறிப்பாக புளியமூட்டுவிளை முத்தாரம்மன் கோவில், செக்கால சமுதாயம் முத்தாரம்மன் கோவில், பாறைகடை மகாதேவர் கோவில், ஆசாரிமார்தெரு இசக்கியம்மன் கோவில், செட்டித்தெரு பிள்ளையார் கோவில், வெள்ளங்கெட்டி பத்ரேஸ்வரியம்மன் கோவில், பள்ளிவிளாகம் உச்சி மகாளியம்மன் கோவில், கோவில்விளை அம்மன் கோவில், தெற்கு கள்ளியடப்பு பத்திரகாளியம்மன் கோவில், சாந்தசிவபுரம் சிவன் கோவில் போன்ற கோவில்களில் இருந்து பறக்கும் வேல் காவடிகள் புறப் பட்டன.

இந்த காவடி ஊர்வலங்கள் அந்தந்த கோவில்களில் இருந்து புறப்பட்டு குளச்சல் அண்ணாசிலை சந்திப்பு வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து இரணியல் வழியாக திருச்செந்தூர் நோக்கி புறப் பட்டது.

இதுபோல், திங்கள்சந்தையில் இருந்தும் திருச்செந்தூருக்கு பறக்கும் வேல் காவடி ஊர்வலம் புறப்பட்டது.

இரணியல், பூச்சாஸ்தன்விளை, மாங்குழி. பெறுங்கோடு, காட்டுவிளை, பாசிகுளத்தூர், ஆலங்கோடு, புதுவிளை, காஞ்சிரவிளை பேயன்குழி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றனர்.

எண்ணெய் காவடி, புஷ்பகாவடி, தேர் காவடி, வேல் காவடி, சூரிய காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை பக்தர்கள் எடுத்துச் சென்றனர். காவடி ஊர்வலத்தையொட்டி அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com