

வேலூர்
ஊழியர்களுக்கான ஊதிய நிலுவைத்தொகை வழங்குவதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேலூர் ஆவின் உதவி பொது மேலாளர் கைது செய்யப்பட்டார்.
உதவி பொது மேலாளர்
வேலூர் சத்துவாச்சாரியில் வேலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் (ஆவின் நிறுவனம்) உள்ளது. இங்கு உதவி பொது மேலாளராக (பால்பதம்) மகேந்திரமாலி (வயது 56) என்பவர் பணியாற்றி வருகிறார். ஆவின் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஏராளமானவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க, நிலுவை தொகைக்கான காசோலையை, காட்பாடி கழிஞ்சூரை சேர்ந்த ஒப்பந்ததாரரான ஜெயச்சந்திரன் என்பவருக்கு உதவி பொது மேலாளர் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. ஜெயச்சந்திரன் தொடர்ந்து கேட்கவே அவர் காலதாமதம் செய்து வந்தார்.
லஞ்சம் வாங்கியபோது கைது
காசோலை வழங்க வேண்டும் என்றால் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயச்சந்திரன் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ஜெயச்சந்திரனிடம் ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை கொடுத்தனர். அந்த பணத்தை நேற்று ஜெயச்சந்திரன் ஆவின் நிறுவனத்துக்கு கொண்டு சென்று மகேந்திரமாலியிடம் வழங்கினார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி தலைமையிலான போலீசார் மகேந்திரமாலியை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் அலுவலக கதவு பூட்டப்பட்டு, வெளியே இருந்து உள்ளேயும், உள்ளே இருந்து வெளியேயும் யாரும் செல்லாத வகையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
துப்பாக்கி பறிமுதல்
மலும் ஆவின் உதவி பொது மேலாளர் மகேந்திரமாலி தங்கி இருந்த சத்துவாச்சாரியில் உள்ள வீட்டிலும் சோதனை செய்யப்பட்டது. அப்போது அங்கு ஒரு சிறிய கை துப்பாக்கி, தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டன.
வேலூரில் லஞ்சம் வாங்கிய ஆவின் உதவி பொது மேலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.