வேலூர் மத்திய ஆண்கள் ஜெயில்: ஆயுள் தண்டனை கைதிகள் 15 பேர் விடுதலை

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதிகள் 15 பேர் 4-ம் கட்டமாக நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.
வேலூர் மத்திய ஆண்கள் ஜெயில்: ஆயுள் தண்டனை கைதிகள் 15 பேர் விடுதலை
Published on

வேலூர்,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி 10 ஆண்டுகளுக்கு மேல் ஜெயிலில் இருக்கும் தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி சென்னை புழல் மத்திய ஜெயிலில் இருந்து கடந்த ஜூன் மாதம் 18-ந் தேதி முதல் 7 கட்டங்களாக 210 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுக்கு உடைகள் மற்றும் ஒரு வாரத்துக்கான உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. ஒரு சிலருக்கு சுயதொழிலுக்கான உபகரணங்களும் வழங்கப்பட்டன.

இதேபோல் வேலூர் மத்திய ஜெயிலில் 187 ஆண் கைதிகளும், 15 பெண் கைதிகளும் நன்னடத்தை அடிப்படையில் விடுதலையாவதற்கு தகுதி பெற்றிருந்தனர். அவர்கள் குறித்த பட்டியல் தமிழக அரசுக்கு சிறைத்துறை நிர்வாகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது.

ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த கைதிகள் 7 பேர் கடந்த ஜூலை மாதம் 25-ந் தேதி முதல் கட்டமாக விடுதலை செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக 24 பேரும், 3-ம் கட்டமாக ஒருவர் என 32 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த கைதிகள் துரை, சம்பத், ராமமூர்த்தி, ரேணுகோபால், அயூப்கான், முருகன், பர்குணன், ஆபுர்கான், முனி என்ற சுபாச்சாரி, ராமலிங்கம், காசி, நாகராஜ், முனியப்பன், அர்ஜூனன், நரசிம்மச்சாரி ஆகிய 15 பேரையும் 4-ம் கட்டமாக விடுதலை செய்வதற்கான ஆணை நேற்று முன்தினம் இரவு வேலூர் ஜெயிலுக்கு வந்தது. இதுகுறித்து அவர்களின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து 15 பேரின் குடும்பத்தினரில் ஒரு சிலர் மட்டுமே ஜெயில் வாசல் முன்பாக காத்திருந்தனர். காலை 6.30 மணியளவில் ஜெயில் சூப்பிரண்டு (பொறுப்பு) முருகேசன், 15 பேருக்கும் அவர்களது உடமைகள், ஒரு வாரத்துக்கு தேவையான உணவுப்பொருட்கள், ஜெயிலில் வேலை பார்த்தற்கான கூலி ஆகியவற்றை வழங்கி அனுப்பி வைத்தார்.

இதுவரை வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் இருந்து 47 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com