வேலூர் கலெக்டர் அலுவலகம், கார்களை ஜப்தி செய்ய முயற்சி

இழப்பீடு வழங்காததால் வேலூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் கார்களை ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் கலெக்டர் அலுவலகம், கார்களை ஜப்தி செய்ய முயற்சி
Published on

வேலூர்

இழப்பீடு வழங்காததால் வேலூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் கார்களை ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இழப்பீடு வழங்கவில்லை

குடியாத்தம் அருகே பாலூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் கொத்தூர் கிராமத்தை சேர்ந்த நீலகண்டன் என்பவரது ஒரு ஏக்கர் 40 சென்ட் நிலமும் கையகப்படுத்தப்பட்டது. அதற்காக அவருக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. இந்தத் தொகை குறைவானது என கருதிய நீலகண்டன் வேலூர் மாவட்ட நில ஆர்ஜித சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் 2004-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதையடுத்து 2015-ம் ஆண்டு நிலத்துக்கான உரிய இழப்பீடு தொகையாக வட்டி மற்றும் அசலுடன் சேர்த்து ரூ.52 லட்சத்து 25 ஆயிரத்து 395 வழங்க நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் அதற்கான இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை.

ஜப்தி செய்ய வந்தனர்

இதனால் நீலகண்டன் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி வேலூர் கலெக்டர் அலுவலக பொருட்கள் மற்றும் கலெக்டரின் கார், மாவட்ட வருவாய் அலுவலக பொருட்கள் மற்றும் அவரது கார், இவைதவிர நுழைவுவாவில் மெயின் கதவு மற்றும் போர்ட்டிகோ பகுதியில் உள்ள கதவுகள், டி.வி., 7 கார்கள் உள்ளிட்ட இழப்பீட்டு தொகையை ஈடுகட்டும் வகையிலான பொருட்களை ஜப்தி செய்ய கடந்த 3-ந் தேதி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றுவதற்காக கோர்ட்டு அமீனா மற்றும் நீலகண்டன் அவரது தரப்பினர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது போர்ட்டிகோவில் கலெக்டரின் கார், மாவட்ட வருவாய் அலுவலர் கார் நிறுத்தப்பட்டிருந்தன. அதை அவர்கள் ஜப்தி செய்ய முயன்றனர்.

பேச்சுவார்த்தை

அப்போது அங்கு வந்த மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மற்றும் கலெக்டர் அலுவலக அதிகாரிகள் நீலகண்டன் தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அமீனா, கோர்ட்டு உத்தரவை மீற முடியாது என தெரிவித்து ஜப்தி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஒரு மாதத்திற்குள் இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நீலகண்டன் தரப்பினர் ஜப்தி நடவடிக்கையை கைவிட்டு அங்கிருந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com