வேலூர்: மழைநீர் தேங்கி நின்ற 100-க்கும் மேற்பட்ட லாரி டயர்கள் பறிமுதல்

வேலூர் பழைய பைபாஸ் சாலையில் உள்ள லாரி மெக்கானிக் ஷெட்டுகளில் மழைநீர் தேங்கி காணப்பட்ட 100-க்கும் மேற்பட்ட பழைய லாரி டயர்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வேலூர்: மழைநீர் தேங்கி நின்ற 100-க்கும் மேற்பட்ட லாரி டயர்கள் பறிமுதல்
Published on

வேலூர்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. இதையொட்டி வேலூர் மாவட்டத்தில் பருவமழை வெள்ள பாதிப்புகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. குறிப்பாக வெள்ள பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து, அங்கு பொருட்சேதம், உயிர்சேதங்களை தவிர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் தொற்றுநோய் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கும் பணியை சுகாதாரத்துறை செய்து வருகிறது. டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்களை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு, கலெக்டர் ராமன் உத்தரவிட்டார். அதன்படி வீடுகள், திருமண மண்டபங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வுகள் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் வேலூர் மாநகராட்சி 4-வது மண்டலத்துக்கு உட்பட்ட பழைய பைபாஸ் சாலையோரம் உள்ள மெக்கானிக் ஷெட்டுகளில் திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள பழைய லாரி டயர்களில் மழைநீர் தேங்கி நிற்பதாகவும், அதில் டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் கொசுக்கள் உற்பத்தியாவதாகவும் மாநகராட்சி கமிஷனர் விஜயகுமாருக்கு புகார் வந்தது.

அவரின் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் மதிவாணன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நேற்று காலை பழைய பைபாஸ் சாலையில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சாலையோரம் மற்றும் கடைகளின் முன்பாக வைக்கப்பட்டிருந்த பழைய லாரி டயர்களில் தேங்கி நிற்கும் மழைநீரில் டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் கொசு புழுக்கள் உற்பத்தியாகி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். மழைநீர் தேங்கும் வகையில் தொடர்ந்து லாரி டயர்களை வைத்திருந்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். பின்னர் பழைய லாரி டயர்களை 2 மினிலாரியில் ஏற்றி சென்றனர்.

சுமார் 20-க்கும் மேற்பட்ட மெக்கானிக் ஷெட்டுகளில் நடந்த சோதனையில் 100-க்கும் மேற்பட்ட பழைய லாரி டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டன என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com