

ராசிபுரம்,
ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள வெண்ணந்தூர் பேரூராட்சிக்குட்பட்ட சர்க்கார் தோப்பில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் புறம்போக்கு நிலத்தில் பல வருடங்களாக குடியிருந்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இதையொட்டி அமைச்சர் சரோஜா நேற்று கொளுத்தும் வெயிலில் அங்கு வீதி, வீதியாக சென்று மக்கள் குறைகளை கேட்டார். அந்தப் பகுதியில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கும் இடங்களை சுற்றி பார்த்து ஆய்வு செய்தார். பொதுமக்கள் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்ய கோரி மனுக்கள் அளித்தனர்.
அப்போது சர்க்கார் தோப்பில் வசிப்பவர்களுக்கு விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களுக்கு அமைச்சர் உறுதி அளித்தார். மேலும் பட்டா வழங்குவதற்கான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ளும்படி வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி, ராசிபுரம் சமூக நலத்திட்ட தாசில்தார் பாஸ்கர், வெண்ணந்தூர் பேரூராட்சி நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் சரோஜா அங்குள்ள பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். சர்க்கார் தோப்பு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டார். அங்குள்ள கழிப்பிடத்திற்கு தண்ணீர் வசதி இல்லாமல் இருந்தது. அந்த கழிப்பிடத்திற்கு தண்ணீர் வசதி செய்து தரும்படி வெண்ணந்தூர் பேரூராட்சி நிர்வாக அதிகாரிக்கு அவர் உத்தரவிட்டார்.
அத்தனூர் பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். முதியோர் உதவித் தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, பசுமை வீடுகள், வீட்டு மனை பட்டா, பஸ் வசதி, ஆஸ்பத்திரியை தரம் உயர்த்துதல் உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். மனுக்களை பெற்ற அமைச்சர் சரோஜா அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் மக்களிடம் கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என்று கூறினார்.
இதில் அத்தனூர் பேரூராட்சி நிர்வாக அதிகாரி சதாசிவம், வெண்ணந்தூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வக்கீல் தாமோதரன், ராசிபுரம் நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் இ.கே.பொன்னுசாமி, ராசிபுரம் ஒன்றிய செயலாளர் காளியப்பன், நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எல்.எஸ்.மணி, மசக்காளிப்பட்டி கூட்டுறவு சங்கத் தலைவர் பிரகாசம், வெண்ணந்தூர் பேரூர் அ.தி.மு.க.செயலாளர் எஸ்.என்கே.பி.செல்வம், அத்தனூர் பேரூர் செயலாளர் செழியன், அத்தனூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் ஏ.எஸ்.ராமதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அமைச்சரை வரவேற்று கட்சிக் கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.