வேப்பூரில் பரபரப்பு, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் வெட்ட முயற்சி - தாதா மணிகண்டனின் கூட்டாளிகள் 2 பேர் கைது

வேப்பூரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் வெட்ட முயன்ற தாதா மணிகண்டனின் கூட்டாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வேப்பூரில் பரபரப்பு, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் வெட்ட முயற்சி - தாதா மணிகண்டனின் கூட்டாளிகள் 2 பேர் கைது
Published on

வேப்பூர்,

கடலூர் மாவட்டம் வேப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி, தலைமை காவலர்கள் பக்தவச்சலம், சதன், சரத் ஆகியோர் வேப்பூரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உளுந்தூர்பேட்டை மார்க்கத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்ற ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி, அதில் வந்த 2 பேரிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள், முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். இதனால் அவர்கள் மீது சந்தேகமடைந்த போலீசார், அவர்களது மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர். அப்போது முன்பக்கத்தில் இருந்த பையில் 2 பட்டா கத்திகள் இருந்தது.

உடனே 2 பேரும் ஆளுக்கொரு கத்தியை கையில் எடுத்துக்கொண்டு, சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியனை வெட்ட முயன்றனர். அப்போது அருகில் இருந்த மற்ற போலீசார் அவர்களது கைகளை பிடித்து தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.

அங்கு இன்ஸ்பெக்டர் கவிதா, குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், புதுச்சேரி மாநிலம் முத்திரையர்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முகமது ஈசா மகன் சுதாகர் என்கிற அப்துல்லா (வயது 27), மற்றொருவர் கைலாஸ்பேட்டை மாந்தோப்பு பீமா நகரை சேர்ந்த ரமேஷ் மகன் நிசாந்த்குமார் (25) என்பதும் தெரியவந்தது. மேலும், இருவரும் கூலிப்படையை சேர்ந்த தாதா மணிகண்டன், தமிழரசன், ராஜ் குமார் ஆகியோரின் கூட்டாளிகள் என்பதும், ஆள் கடத்தல், வழிப்பறி மற்றும் திருட்டு, வெட்டுக்குத்து போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

நிசாந்த்குமார், அப்துல்லா ஆகியோர் சேர்ந்து, கடந்த அக்டோபர் மாதம் வேப்பூர் அருகே மங்களூரில் நகை அடகு கடை நடத்தி வரும் மலையனூரை சேர்ந்த ரவிசந்திரன் மனைவி கலைவாணி என்பவரை வழிமறித்து, அவரிடம் இருந்த நகை, பணத்தை பறித்து சென்றதையும் ஒப்புக்கொண்டனர்.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல்லா, நிசாந்த் குமார் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், 2 பட்டா கத்திகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com