கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணி: நேர்காணலுக்கு வந்த இளைஞர்கள் ‘திடீர்’ சாலை மறியல்

வேலூரில் நடக்கவிருந்த கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணி நேர்காணல் ரத்து குறித்து முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறி இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணி: நேர்காணலுக்கு வந்த இளைஞர்கள் ‘திடீர்’ சாலை மறியல்
Published on

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் காலியாக இருக்கும் 67 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கத்தில் கடந்த 23-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை 5 நாட்கள் நேர்காணல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக நிர்வாக காரணங்களுக்காக திடீரென நேர்காணல் ரத்து செய்யப்படுவதாகவும், தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனாலும் நேற்று முன்தினம் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணி நேர்காணலுக்காக ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்த ஏராளமான இளைஞர்கள் வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கத்திற்கு வந்தனர். அங்கு நேர்காணல் ரத்து செய்யப்பட்டது குறித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. இதனை கண்ட இளைஞர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இந்த நிலையில், நேர்காணல் ரத்து குறித்து தகவல் அறியாத, ஏற்கனவே அழைக்கப்பட்டிருந்த 300-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் நேற்று காலை 9 மணியளவில் நேதாஜி விளையாட்டு அரங்கு முன்பு திரண்டனர். விளையாட்டு அரங்கின் நுழைவு வாயில் அருகே நேர்காணல் ரத்து செய்யப்பட்டது குறித்து ஒட்டப்பட்டிருந்த நோட்டீசை கண்ட அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

நேர்காணலுக்கு வந்த இளைஞர்கள் நேர்காணல் ரத்து குறித்து முறையாக முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்கள். தொடர்ந்து அவர்கள் திடீரென விளையாட்டு அரங்கின் முன்பாக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் தெற்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நாகராஜன், வடக்கு இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com