கால்நடை மருந்தகங்கள் தரம் உயர்வு - அமைச்சர் பாஸ்கரன் தகவல்

மாவட்டத்தில் இந்த ஆண்டு 8 துணை கால்நடை மருந்தகங்கள் தரம் உயர்வு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.
கால்நடை மருந்தகங்கள் தரம் உயர்வு - அமைச்சர் பாஸ்கரன் தகவல்
Published on

சிவகங்கை,

கல்லல் ஊராட்சி ஒன்றியம், ஆலங்குடி ஊராட்சியில் கால்நடைகள் பராமரிப்புத்துறை மூலம் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகம் தொடக்க விழா கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகத்தை திறந்து வைத்து பேசியதாவது:- மாவட்டத்தில் 2 தலைமை கால்நடை மருத்துவமனைகள் மற்றும் 77 கால்நடை மருந்தகங்கள், 44 துணை கால்நடை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு பகுதியிலும் கால்நடைகளின் எண்ணிக்கையை பொருத்து தேவைக்கேற்ப துணை கால்நடை நிலையங்கள் தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் கால்நடை வளர்ப்பவர்கள் எளிதாக கால்நடைகளை பராமரிக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதி கிடைத்திடும் வகையில் துணை கால்நடை நிலையங்கள் ஒவ்வொரு ஆண்டும் தரம் உயர்த்தப்பட்டு, அவை கால்நடை மருந்தகங்களாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நடப்பாண்டில் ஆலங்குடி உள்பட 8 துணை கால்நடை நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு கால்நடை மருந்தகங்களாக செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் இந்த பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள கால்நடை வளர்ப்பவர்களுக்கு இந்த மருந்தகம் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்

நிகழ்ச்சியில் காரைக்குடி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் அசோகன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர்கள் முகமதுநாசர் சேக், முத்துமீனாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com