வேட்டவலம், பெண்ணிடம் கவரிங் சங்கிலியை பறித்த திருடன் கைது

‘லிப்ட்’ கொடுத்து மோட்டார்சைக்கிளில் அழைத்துச் சென்று பெண்ணிடம் கவரிங் சங்கிலியை பறித்த திருடன் கைது செய்யப்பட்டான்.
வேட்டவலம், பெண்ணிடம் கவரிங் சங்கிலியை பறித்த திருடன் கைது
Published on

வேட்டவலம்,

வேட்டவலம் அருகில் உள்ள வடக்குவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரின் மனைவி மீனா (வயது 54). இவர், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். மீனா நேற்று மாலை வேலைக்குச் சென்று விட்டு வேட்டவலம் பஸ்சில் இருந்து இறங்கி வடக்குவெளி கிராமத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவர், மீனாவிடம் எனது மோட்டார்சைக்கிளில் உட்காருங்கள் உங்களை ஊரில் கொண்டு போய் விட்டு விடுகிறேன், எனக் கூறினார். அவர் கூறியதை உண்மை என்று நம்பிய மீனா, அவரின் மோட்டார்சைக்கிளில் ஏறி அமர்ந்து கொண்டார்.

சிறிது தூரம் சென்றபோது, மோட்டர்சைக்கிள் கண்ணாடி வழியாக மீனா அணிந்திருந்த நகையை அவர் பார்த்துக் கொண்டே வந்தார். அவருக்கு சந்தேகம் ஏற்படவே மீனா மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கூறினார்.

ஓடும் மோட்டார்சைக்கிளை நிறுத்தியதும், அதில் இருந்து கீழே இறங்கிய மீனா மீண்டும் கிராமத்தை நோக்கி நடந்துள்ளார்.

மீனாவை பின்தொடர்ந்து சென்ற அவர், திடீரென மீனாவின் சங்கிலியை பறிக்க முயன்றார். அதிர்ச்சி அடைந்த அவர் திருடன் திருடன் எனச் சத்தம்போட்டு கூச்சலிட்டார்.

அவரின் கூச்சல் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து சங்கிலி பறித்தவரை மடக்கி பிடித்தனர்.

இதுகுறித்து அவர்கள், வேட்டவலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சங்கிலி பறித்த திருடனை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அவர், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா தேவதானம்பேட்டையைச் சேர்ந்த குமார் (38) என்றும், மீனா அணிந்திருந்த சங்கிலி தங்கம் என நினைத்து கவரிங் சங்கிலியை பறிக்க முயன்றதாகக் கூறினார். இதையடுத்து குமார் கைது செய்யப்பட்டார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com