

வேதாரண்யம்:
வேதாரண்யம், திருமருகல் பகுதிகளில் விடிய, விடிய கன மழை வெளுத்து வாங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
விடிய, விடிய கன மழை
நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த மாதம் தொடர் மழை பெய்தது. இதில் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கின. இதை தொடர்ந்து மழை நின்றவுடன் வயல்களில் தேங்கியிருந்த மழைநீரை விவசாயிகள் வெளியேற்றி விவசாய பணிகளை மேற்கொண்டனர்.
இதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக இரவில் கடுமையாக பனி பொழிவு நிலவி வருகிறது. இந்த நிலையில் கோடியக்கரை, வாய்மேடு, கரியாப்பட்டினம், செம்போடை உள்ளிட்ட வேதாரண்யம் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய கன மழை வெளுத்து வாங்கியது.
விவசாயிகள் மகிழ்ச்சி
இதை தொடர்ந்து நேற்று காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. இந்த திடீர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடைவீதிகளில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தது.
வேதாரண்யம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்கள் கதிர்விடும் நிலையில் உள்ளது. இந்த மழை பயிர்களுக்கு ஏற்ற நிலையில் பெய்துள்ளதால் மகிழ்ச்சி அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
திருமருகல்
திருமருகல் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலும், இரவில் பனி பொழிவும் நிலவி வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென மழை பெய்தது.இந்த மழை விடிய, விடிய தொடர்ந்து நீடித்தது.இதேபோல் திட்டச்சேரி, திருமருகல், திருக்கண்ணபுரம், ஏனங்குடி, அம்பல், போலகம், புத்தகரம், குத்தாலம், நரிமணம், கொட்டாரக்குடி, வாழ்குடி உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்தது.கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலை முதல் பலத்த மழை பெய்தது. இந்த மழை காலை 11 மணி வரை நீடித்தது.
இதேபோல கீழ்வேளூர், தேவூர், வடகரை, கோகூர், ஆனைமங்கலம், நீலப்பாடி, அத்திப்புலியூர், குருக்கத்தி, கூத்தூர், குருமணாங்குடி, தேவூர், வெண்மணி, பட்டமங்கலம், ராதாமங்கலம், இலுப்பூர், வடக்காலத்தூர், இருக்கை கிள்ளுக்குடி, சாட்டியக்குடி வலிவலம் மற்றும் சிக்கல், ஆழியூர், அகரகடம்பனூர், சங்கமங்கலம், ஆவராணி, புதுச்சேரி, உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.