வெளியூர்களில் இருந்து சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள், விழுப்புரம் நகருக்குள் வர தடை போலீசார் தீவிர சோதனை

வெளியூர்களில் இருந்து சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள் விழுப்புரம் நகருக்குள் வர போலீசார் தடை விதித்து தீவிர சோதனை செய்து வருகின்றனர்.
வெளியூர்களில் இருந்து சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள், விழுப்புரம் நகருக்குள் வர தடை போலீசார் தீவிர சோதனை
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக விழுப்புரம் நகரில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்நோய் பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் வெளியூர்களில் இருந்து காய்கறிகள், மளிகைப்பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் அடங்கிய சரக்குகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் விழுப்புரம் நகரம் வழியாக வந்து செல்வதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரின் அறிவுரைப்படி விழுப்புரம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம் தடை விதித்துள்ளார்.

போலீசார் சோதனை

அதாவது திருச்சி, சேலத்தில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு செல்லும் வாகனங்கள் விழுப்புரம் நகருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாக செல்ல வேண்டும் என்றும், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டையில் இருந்து புதுச்சேரி செல்லக்கூடிய வாகனங்கள் விழுப்புரம் நகருக்குள் வராமல் முண்டியம்பாக்கம், பனையபுரம், கோலியனூர் வழியாக செல்ல வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதையொட்டி விழுப்புரம் நகர எல்லைகளான ஜானகிபுரம், முத்தாம்பாளையம், கோலியனூர் கூட்டுசாலை, மாம்பழப்பட்டு சாலை ஆகிய இடங்களில் போலீசார், பேரிகார்டுகள் மூலம் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். நேற்று மாலை விழுப்புரம் முத்தாம்பாளையத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம் தலைமையில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு அந்த வழியாக சரக்குகளை ஏற்றிக்கொண்டு வந்த வாகனங்களை நகருக்குள் செல்லாதபடி புறவழிச்சாலையிலேயே செல்லும்படி அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com