பெரம்பலூரில் கோவில்கள்-மழலையர் பள்ளிகளில் விஜயதசமி விழா

பெரம்பலூரில் உள்ள கோவில் மற்றும் மழலையர் பள்ளிகளில் விஜயதசமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பெரம்பலூரில் கோவில்கள்-மழலையர் பள்ளிகளில் விஜயதசமி விழா
Published on

பெரம்பலூர்,

ஆண்டுதோறும் விஜயதசமி நாளில் பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது தொன்று தொட்டு வழக்கமாக இருந்து வருகிறது. கைக்குழந்தைகளுக்கு ஒருவயதிற்குள் காது குத்தி (கர்ணபூசனம்) பெயர்சூட்டி அன்னம் பாலிப்பு செய்யும் வழக்கத்தை போல 2 வயது முதல் 3 வயதான குழந்தைகளை விஜயதசமி நாளில் மழலையர் பள்ளியில் சேர்த்து கற்றல்-கற்பித்தல் பாலபாடத்தை தொடங்குவதை நம் முன்னோர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். அதனை நவீன காலத்திலும் பெற்றோர்கள் கடைபிடித்து வருகின்றனர்.

விஜயதசமியை முன்னிட்டு பெரம்பலூரில் மழலையர் பள்ளிகள், தொடக்கப்பள்ளிகளில் முதன்முதலில் பள்ளிக்கூடம் செல்லும் மழலையருக்கு அட்சர அப்யாசம் கற்பிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பள்ளிக்கு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அழைத்து வந்தனர். பின்பு மடியில் குழந்தையை உட்காரவைத்து தட்டுகளில் அட்சதையில் (நெல் அல்லது அரிசி) விநாயகர், பிரணவம் மற்றும் குழந்தையின் பெயரை எழுதி, சரஸ்வதி துதியை போதித்தனர்.

கோவில்களில் விஜயதசமி விழா

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள ஆதிசங்கரர் வழிபட்ட பெருமை பெற்ற மதுரகாளி அம்மன் கோவிலில் விஜயதசமி விழாவும், 36-வது ஆண்டு நவராத்திரி லட்சார்ச்சனை நிறைவு விழாவும் நேற்று நடந்தது. இதனையொட்டி அம்மனுக்கு மகிசாசுரமர்த்தினி அலங்காரமும், இரவு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும், அம்பு போடுதல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

பெரம்பலூரில் தீரன் நகர் எதிரே திருச்சி-சென்னை 4 வழிச்சாலையில் அமைந்துள்ள ஷீரடி மதுரம் சாய்பாபா கோவிலில் நவராத்திரிவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனைத்தொடர்ந்து விஜயதசமி விழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு காலை சிறப்பு ஹோமம், உச்சிகாலத்தில் தீபாராதனை மற்றும் அன்னதானம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பெரம்பலூரில் வைக்கப்பட்டிருந்த நவராத்திரி கொலு விஜயதசமியையொட்டி நேற்று பல வீடுகளில் தீபாராதனை காண்பிக்கப்பட்டு, கொலு நிறைவு செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com