நிதி நிறுவன மோசடி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் விஜயதரணி எம்.எல்.ஏ. கோரிக்கை

களியக்காவிளை நிதி நிறுவன மோசடி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று விஜயதரணி எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
நிதி நிறுவன மோசடி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் விஜயதரணி எம்.எல்.ஏ. கோரிக்கை
Published on

நாகர்கோவில்,

விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர், களியக்காவிளை மத்தம்பாலையில் செயல்பட்ட நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோருடன் சேர்ந்து கலெக்டர் சஜ்ஜன்சிங் சவானிடமும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரையிடமும் ஒரு மனு கொடுத்தார்.

அந்த மனுவில் விஜயதரணி எம்.எல்.ஏ. கூறியிருப்பதாவது:-

களியக்காவிளை மத்தம்பாலையில் செயல்பட்டு வந்த நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனம் மூடப்பட்டு விட்டதால் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப வழங்க அரசு நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன். இந்த நிதி நிறுவனத்தில் குமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் உள்ள ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகள் என சுமார் ரூ.2000 கோடி வரை முதலீடு செய்துள்ளனர். நிதி நிறுவன பங்குதாரர்கள் முதலீட்டை ஒழுங்காக தொழில் செய்யாமல் தங்கள் பெயரிலும், உறவினர்கள் மற்றும் நண்பர்கள், பினாமிதாரர்கள் பெயரிலும் பணத்தை மாற்றம் செய்து அசையும், அசையா சொத்துக்களாக மாற்றியுள்ளனர். எனவே இந்த சொத்துக்களை பறிமுதல் செய்து, ஏழை முதலீட்டாளர்களுக்கு வழங்க அரசு ஆவன செய்ய வேண்டும்.

விளவங்கோடு தொகுதிக்கு உட்பட்ட ஏழை பெண்கள் முந்திரி தொழிற்சாலையில் இரவு, பகலாக தூங்காமல் பணிபுரிந்து கிடைத்த வருமானத்தை நிர்மல் கிருஷ்ணா தனியார் நிதிநிறுவனத்தில் டெபாசிட் செய்துள்ளனர். இதேபோல் ரப்பர் தோட்ட தொழிலாளர்களும் டெபாசிட் செய்துள்ளனர். எனவே இருள் சூழ்ந்த ஏழைகள் வாழ்வில் ஒளியேற்ற நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவன சொத்துக்களை பறிமுதல் செய்து முதலீட்டாளர்களுக்கு 100 சதவீதம் அசலும், வட்டியும் கிடைக்க செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க வசதியாக களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் பொருளாதார குற்றப்பிரிவு கிளையை தொடங்க வேண்டும். பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களிடம் இருக்கிற ஒரே ஆவணமான கணக்கு புத்தகத்தை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வாங்காமல் நகல்களை வாங்கி கொண்டு புகாரை பதிவு செய்ய அரசு ஆவன செய்ய வேண்டும்.

தமிழக- கேரளா போலீசார் கூட்டு நடவடிக்கை மூலம் இருமாநில சிறப்புக்காவல் தனிப்படை அமைத்து நிதி நிறுவன சொத்துக்களை முடக்க வேண்டும்.

நிதி நிறுவன தாரர்கள் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது ரூ.600 கோடி என கணக்கு காட்டியுள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் கணக்கை பார்க்கும்போது சுமார் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு நிதி முதலீடு செய்துள்ளது என தெரிய வருகிறது. எனவே நிதி நிறுவன அதிபர்கள் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே தமிழக அரசும், கேரள அரசும் இணைந்து செயல்பட்டு கூட்டு நடவடிக்கை குழு ஏற்படுத்தி தமிழகம், கேரளா, வெளிநாடுகளில் நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனத்தார் முதலீடு செய்துள்ள அசையும், அசையா சொத்துக்களை பறிமுதல் செய்து விரைவாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு 100 சதவீதம் அசலும், வட்டியும் பணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அவர் நிருபர்களிடம் கூறும்போது, இந்த நிதி நிறுவன பிரச்சினை இருமாநில மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருப்பதாலும், நிதி நிறுவனத்தினர் தமிழகம் மற்றும் கேரளா, வெளிநாடுகளில் பினாமி பெயரில் வைத்துள்ள சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டியிருப்பதாலும் இந்த நிதி நிறுவன மோசடி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும். இதில் தமிழ்நாடு, கேரளா மாநில அரசுகளும், மத்திய அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com