விக்கிரவாண்டி ஒன்றியத்தில் குடிநீர் திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

விக்கிரவாண்டி ஒன்றியத்தில் குடிநீர் திட்டப்பணிகளை கலெக்டர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
விக்கிரவாண்டி ஒன்றியத்தில் குடிநீர் திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
Published on

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் குடிநீர் வினியோக பணிகளை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்பினை கலெக்டர் சுப்பிரமணியன் பார்வையிட்டார். அதன் பிறகு பொன்னங்குப்பம் ஊராட்சியில் பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் திறந்தவெளி கிணற்றையும், கொட்டியாம்பூண்டி ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றையும், அய்யூர்அகரம் ஊராட்சி சிந்தாமணி கிராமத்தில் ரூ.22 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி கிணற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது ஊரக பகுதிகளில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை போக்கவும், குடிநீர் பிரச்சினைகள் பெரிய அளவில் ஏற்படாமல் ஆரம்ப நிலையிலேயே தவிர்க்கவும், குடிநீர் வினியோகத்தில் ஏற்படும் மின் மோட்டார் பழுது, குடிநீர் குழாய் பழுது ஆகியவற்றை உடனுக்குடன் சரிசெய்து பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது உதவி கலெக்டர் (பயிற்சி) சிவகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சுந்தரேசன், உதவி செயற்பொறியாளர் ஜோதிவேல், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ஜோதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாராயணன், அறவாழி, பொறியாளர்கள் சோமசுந்தரம், ஜான்சிராணி, ஜெயலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com