விழுப்புரம் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் 3 இடங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

விழுப்புரம்,

மடிக்கணினியுடன் கூடிய இணையதள அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், மாவட்ட மாறுதல் உத்தரவுகளை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த 10-ந் தேதி முதல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டத்தின் 8-ம் நாளான நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் புஷ்பகாந்தன் தலைமை தாங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

இதில் வட்ட தலைவர்கள் மணிபாலன், லட்சுமணன், சஷ்டிகுமரன், செயலாளர்கள் அன்பழகன், ஜெயராமன், முருகன், பொருளாளர்கள் அய்யனார், கமலநாதன், வினோத்குமார், அமைப்பு செயலாளர் உத்திரவேல், கோட்ட செயலாளர் அன்பு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, கண்டாச்சிபுரம் ஆகிய 3 தாலுகாக்களை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று திருக்கோவிலூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட இணை செயலாளர் கண்ணதாசன் தலைமை தாங்கினார். வட்ட தலைவர்கள் லோகேஷ், நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருக்கோவிலூர் வட்ட செயலாளர் பார்த்தீபன் வரவேற்றார்.

உளுந்தூர்பேட்டை வட்ட செயலாளர் ராஜா, கண்டாச்சிபுரம் வட்ட இணை செயலாளர் ராம்ஜி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினர். இதில் 3 தாலுகாக்களை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் திருக்கோவிலூர் வட்ட இணை செயலாளர் ஜெகன் நன்றி கூறினார்.

இதேபோல் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம் ஆகிய தாலுகாக்களை சேர்ந்த சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் கள்ளக்குறிச்சி சப்- கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பெரியாப்பிள்ளை தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் பெரியதமிழன், செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி வட்ட தலைவர் கருணாநிதி வரவேற்றார். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com