கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிடை நீக்கம் ரத்து: கலெக்டர் காரை முற்றுகையிட்ட வருவாய்த்துறையினரால் பரபரப்பு

கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிடை நீக்கம் ரத்தை கண்டித்து கலெக்டர் காரை முற்றுகையிட்ட வருவாய் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிடை நீக்கம் ரத்து: கலெக்டர் காரை முற்றுகையிட்ட வருவாய்த்துறையினரால் பரபரப்பு
Published on

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் கருப்பூர் சேனாதிபதி கிராமத்தை சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி ராயர் கடந்த 5 தினங்களுக்கு முன்பு தனது விடுமுறையை ஈட்டிய விடுப்பாக கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் ஊதியத்தை பிடித்தம் செய்ததற்காக துணை தாசில்தாரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனை யடுத்து கிராம நிர்வாக அதிகாரி ராயர் மற்றும் அவருடன் சென்ற கிராம நிர்வாக அதிகாரிகள் பிரபாகரன் (வெங்கனூர்), சுபாஷ்சந்திரபோஸ் (குலமாணிக்கம்) ஆகிய 3 பேரையும் பணியிடைநீக்கம் செய்து கோட்டாட்சியர் சத்யநாராயணன் உத்தரவிட்டார். இதனை ரத்து செய்யக்கோரி கிராம நிர்வாக அதிகாரிகள் முன்னேற்ற சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை 3 கிராம நிர்வாக அதிகாரிகளின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து மீண்டும் பணியமர்த்தி கோட்டாட்சியர் சத்யநாராயணன் உத்தரவிட்டுள்ளார். இதனை அறிந்த தமிழ்நாடு வருவாய்துறை அதிகாரிகள் சங்கத்தினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உரிய விசாரணை நடத்தப்படாமல் உடனடியாக அவர்களது பணியிடை நீக்கத்தை ரத்து செய்ததை கண்டித்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரியலூர்- ஜெயங்கொண்டம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகள் சங்கத்தினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே சென்று கலெக்டர் காரை இரு புறமும் சூழ்ந்து கொண்டு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் 3 கிராம நிர்வாக அதிகாரிகளின் பணியிடைநீக்கத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். அவர்களை மீண்டும் பணியமர்த்தினால் வேறு கோட்டத்திற்கு மாற்ற வேண்டும். 3 கிராம நிர்வாக அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது போராட்டக்காரர்கள் சார்பாக தாசில்தார் (குற்றவியல்) ஸ்ரீதர், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பஞ்சாபகேஷன் ஆகியோர் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரனிடம் கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர். இதில் உடன்பாடு ஏற்படவே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் மாவட்டத்தில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com