சின்னசேலம் அருகே பரபரப்பு ஊருக்குள் புகுந்த மர்ம விலங்கு 13 வெள்ளாடுகளை அடித்து கொன்றது கிராமமக்கள் அச்சம்

சின்னசேலம் அருகே ஊருக்குள் புகுந்த மர்ம விலங்கு 13 வெள்ளாடுகளை அடித்து கொன்ற சம்பவத்தால் கிராம மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
சின்னசேலம் அருகே பரபரப்பு ஊருக்குள் புகுந்த மர்ம விலங்கு 13 வெள்ளாடுகளை அடித்து கொன்றது கிராமமக்கள் அச்சம்
Published on

சின்னசேலம்,

சின்னசேலம் அருகே கனியாமூர் கிழக்கு காட்டுக்கொட்டா பகுதியை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன் மகன் தேவேந்திரன்(வயது 47) விவசாயி. இவர் 21 வெள்ளாடுகளை வளர்த்து வந்தார்.

வழக்கம்போல நேற்று முன்தினம் மாலை மேய்ச்சலுக்கு சென்று வந்த வெள்ளாடுகளை தேவேந்திரன் தனது நிலத்தில் உள்ள ஆட்டுப்பட்டியில் அடைத்தார். பின்னர் அதிகாலையில் எழுந்து பார்த்தபோது 13 ஆடுகள் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தன. மற்ற ஆடுகள் காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்ததை பார்த்து தேவேந்திரன் அதிர்ச்சி அடைந்தார்.

அதிகாரிகள் விரைந்தனர்

ஆடுகளை ஏதோ மர்ம விலங்கு கடித்து கொன்று இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இது காட்டுத்தீ போல பரவியதை தொடர்ந்து கிராம மக்கள் அங்கே திரண்டு வந்து இறந்து கிடந்த ஆடுகளை பார்த்தனர்.

பின்னர் இதுபற்றி சின்னசேலம் போலீசாருக்கும், வனத்துறை அதிகாரிகளுக்கும் கிராமமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் கச்சிராயப்பாளையம் வனவர் சின்னதுரை, வனக் காப்பாளர்கள் செல்வராஜ், பெரியசாமி, அட்யராஜ் கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த ஆடுகளையும், காயங்களுடன் உயிருக்கு போராடிய ஆடுகளையும் பார்வையிட்டனர்.

வன விலங்கு

மேலும் ஆட்டு பட்டி மற்றும் அதன் அருகில் காணப்பட்ட காலடி தடத்தை ஆய்வு செய்தனர். அப்போது அது வனவிலங்கு காலடி தடம்தான் என்பது உறுதியானது. இதனால் சிறுத்தை, சென்நாய் போன்ற வனவிலங்குகளில் எதேனும் ஒன்று வெள்ளாடுகளை தாக்கி இருக்கலாம் என சந்தேகிக்கிக்கப்படுகிறது.

வனத்துறையினரின் அறிவுரையின்பேரில் தொட்டியம் கால்நடை மருத்துவர் டாக்டர் ஜெயகாந்தி இறந்து கிடந்த ஆடுகளை உடல் கூறு செய்து விவரங்களை பதிவு செய்தார். பின்னர் ஆடுகளின் உடல்கள் அதே இடத்தில் புதைக்கப்பட்டது.

கடந்த 2 ஆண்டுகளாக

இதேபோல கடந்த இரு வாரங்களுக்கு முன்பும் இதே கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமசாமிக்கு சொந்தமான 4 வெள்ளாடுகளை மர்ம விலங்கு அடித்து கொன்றது குறிப்பிடத்தக்கது.

வனப் பகுதியிலிருந்து வெளியேறிய வனவிலங்கு ஒன்று கடந்த 2 ஆண்டுகளாக கிராமத்தை ஒட்டிய பகுதிகளில் சுற்றித் திரிவதாகவும், குறிப்பாக ஆடுகளை மட்டுமே குறிவைத்து தொடர்ந்து தாக்கி வருவதாகவும். இது கிராமமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும். எனவே மர்ம வனவிலங்கை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா.

சின்னசேலம் அருகே மர்ம விலங்கு தாக்கி 13 வெள்ளாடுகள் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com