ஊரடங்கை மீறி ஏரியில் திரண்டு மீன்பிடித்த கிராம மக்கள் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறல்

குன்னம் அருகே ஊரடங்கை மீறி ஏரியில் திரண்டு மீன்பிடித்த கிராம மக்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
ஊரடங்கை மீறி ஏரியில் திரண்டு மீன்பிடித்த கிராம மக்கள் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறல்
Published on

குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வேப்பூரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 64 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி, வேப்பூர் கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவருக்கு ரூ.1.25 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. அந்த ஏரியில் அவர் 40 ஆயிரம் மீன் குஞ்சுகள் விட்டு வளர்த்தார். தற்போது ஏரியில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே தண்ணீர் உள்ளது. இந்த ஏரியில் வேப்பூர் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் சார்பில் ஆண்டுதோறும் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், மீன்பிடி திருவிழா நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

போலீசார் திணறல்

இந்நிலையில் நேற்று காலை திடீரென தடையை மீறி இந்த ஏரியில் வேப்பூர் சுற்றுப்பகுதி கிராம மக்கள் வலை, வேட்டி மற்றும் சேலையை பயன்படுத்தி மீன்பிடி திருவிழாவை நடத்தினர். இதில் வேப்பூர், நன்னை கல்லை, ஓலைப்பாடி, வயலப்பாடி, கீரனூர், பரவாய், வைத்தியநாதபுரம், ஆண்டிகுரும்பலூர், முருக்கன்குடி, நமையூர், பெருமத்தூர், குடிகாடு, எறையூர், வாலிகண்டபுரம், கீழப்புலியூர் உள்பட 25 கிராம பகுதிகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு, ஏரியில் இறங்கி மீன்களை பிடித்தனர். இதில் அவர்கள் ஒரு கிலோ எடை உள்ள கெண்டை, ஜிலேபி உள்ளிட்ட மீன்களை பிடித்து அள்ளிச்சென்றனர்.

சமூக இடைவெளி இல்லாமல் ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் திரண்டு மீன்பிடி திருவிழா நடத்தியது, அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே மீன்பிடி திருவிழா பற்றி தகவல் அறிந்த குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலு தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பொதுமக்களை கலைந்து போக சொல்லி வலியுறுத்தினார். ஆனால், பொதுமக்கள் ஆளுக்கு ஒருபக்கமாக ஏரிக்குள் இறங்கியதால், அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com